Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Tuesday, December 31, 2013

Happy new year 2014

பர்மாவில் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு: 5 பேர் விடுதலை

பர்மா என்றும் அழைக்கப்படும் மியன்மார் அரசாங்கம் ஐந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்துள்ளது. நாட்டின் கடைசி அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்துவிடுவதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அரசியல் சீர்திருத்தங்களை அறிவித்துவரும் அதிபர் தெயின் செய்ன், இந்த ஆண்டின் இறுதிக்குள் எல்லா அரசியல்கைதிகளையும் விடுதலை செய்துவிடுவதாக உறுதியளித்திருந்தார். ஐம்பது பேர்வரையில் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர். அவர்கள் அடுத்துவரும் நாட்களில் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் யார் விடுதலைக்குள் அடங்குவார்கள் என்ற பட்டியலை அரசாங்கம் அறிவிக்கவில்லை. ஆனால், வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளவர்களும் அரசியல் குற்றங்களுக்காக விசாரிக்கப்பட்டுள்ளவர்களும் இந்த பொதுமன்னிப்பு நடைமுறைக்குள் அடங்குவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இராணுவ பின்புலத்தைக் கொண்ட அரசாங்கத்தால் 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த பொதுமன்னிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு உதவ கியூபா உறுதி அளித்துள்ளது:-

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் அமர்வின்போது வரக்கூடிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க இலங்கையின் நட்பு நாடுகளில் ஒன்றான கியூபா, உதவுவதாக உறுதியளித்துள்ளது. 'எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக, கொள்கை அடிப்படையிலான குறிப்பான தீர்மானங்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்பதனால், கியூபா அதை எதிர்க்கின்றது என கியூப தூதுவர் இந்திரா லோப்பஸ் கூறினார். இப்படி ஒரு நாட்டைத் தனியாக தேர்ந்தெடுத்து தீர்மானம் கொண்டுவருவது ஒத்துழைப்பாகாது. இது அந்த நாட்டின் இறைமையை மீறுவதாகும். இது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தேவையின்றி தலையிடுவதாகும். இது ஒரு நாட்டின் மீது தேவையில்லாத அழுத்தத்தை பிரயோகிப்பதாகும் இது சர்வதேச சட்டத்தின் உண்மைப் பொருளாகாது என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை காரணமாக இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்க முடியாத நிலையில் கியூபா உள்ளதென்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தாலிய நகரமொன்றில் அதிகளவில் இலங்கையர்கள் வாழ்கின்றனர்

இ;த்தாலிய நகரமொன்றில் அதிகளவில் இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். இத்தாலியின் பாலர்மோ என்னும் நகரில் அதிகளவில் இலங்கையர்கள் குடியேறியுள்ளனர். ஏனைய வெளிநாட்டவர்களை விடவும் இலங்கையர்கள் அதிகளவில் குறித்த நகரத்தில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த நகரில் 30000 வெளிநாட்டுப் பிரஜைகள் வாழ்ந்து வருவதாக மாநகரசபை அறிவித்துள்ளது. இதில் அதிகளவானவர்கள் இலங்கையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ம் ஆண்டில் பாலர்மோவின் மொத்த சனத்தொகையில் 17.1 வீதமானவர்கள் இலங்கையர்கள் என புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கம் அடிமைக் கொள்கைகளை பின்பற்றி வருவதாக ஐ.தே.க குற்றச்சாட்டு:-

அரசாங்கம் அடிமைக் கொள்கைகளை பின்பற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் புதிய அடிமைக் கொள்கைகளை பின்பற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். டொலர்களை அடிபப்டையாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பி வைத்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் மீண்டும் சீனி தனியார் கம்பனி99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள்

கரும்பு உற்பத்தியை மேற்கொள்வதற்கென வடக்கில் பெருமளவான காணிகளை சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் 71 ஆயிரத்து 716 ஏக்கர் காணிளை சுவீகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் எதிர்வரும் 3ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார். எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடும் அமைச்சரவையில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. இதற்கிணங்க வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், ஓமந்தை, கனகராயன்குளம், நயினாமடு, தந்திரிமலை ஆகிய பகுதிகளில் 42 ஆயிரத்து 111 ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் 24 ஆயிரத்து 340 ஏக்கர் காணிகளும் மன்னார் மாவட்டத்தில் மடு, மாந்தை தெற்கு ஆகிய பகுதிகளில் 5185 ஏக்கர் காணிகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன் பகுதியில் 80 ஹெக்டெயர் காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளது. கரும்புச் செய்கைக்காக காணி சுவீகரிப்பு என்ற பெயரில் வடக்கில் பெருமளவான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளமை தற்போதைய நிலையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. லங்கா சீனி தனியார் கம்பனி என்ற நிறுவனமொன்றை ஆரம்பித்து அந்த கம்பனிக்கே இந்தக் காணிகள் 99 வருட குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை ஊடகவியலாளாகள் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றனர் – SAFMA

இலங்கை ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாற்ற நிலையில் காணப்படுவதாக தெற்காசிய சுதந்திர ஊடகப் பேரவை தெரிவித்துள்ளது. முழு அளவில் கருத்துச் சுதந்திரமுடையவர்களாக இலங்கை ஊடகவியலாளர்கள் செயற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஊடக சுதந்திர நிலையில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. 2013ம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில் இலங்கை 162ம் நிலையை வகிக்கின்றது. மொத்தமாக 179 நாடுகளில் இலங்கை 162ம் இடத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அடக்குமுறைகள் காரணமாக 80க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் அதிகளவில் ஊடக அடக்குமுறைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

நான்கு இலங்கையர்கள் தனுஸ்கோடியில் கைது:-

நான்கு இலங்கையர்கள் இந்தியாவின் தனுஸ்கோடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய பயண ஆவணங்கள் எதுவும் இன்றி இவர்கள் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படகு மூலம் தனுஸ்கோடி கடற்பரப்பை சென்றடைந்த போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிர்மலன், அவரது மனைவி நிசாந்தினி, மகன் டிக்ஸன் மற்றும் படகை செலுத்திய கந்தசாமி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பெற்றோர் தமது திருமணத்திற்கு எதிர்ப்பை வெளியிட்ட காரணத்தினால் தாம், இந்தியாவிற்கு சென்றதாக குறித்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் அல்- ஜசீரா ஊடகவியலாளர்கள் கைது

பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பீட்டர் கிரெஸ்டே எகிப்து தலைநகர் கெய்ரோவில் அல்-ஜசீரா செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் குழுவினர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அல் ஜசீரா தொலைக்காட்சி வலையமைப்பின் கெய்ரோ பணியகத் தலைமை செய்தியாளர் மொஹமட் ஃபாதல் ஃபாஹ்மியும் பிபிசியின் முன்னாள் பிராந்திய செய்தியாளர் பீட்டர் கிரெஸ்டேவும் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர்.மொஹமட் ஃபாதல் ஃபாஹ்மி கனேடிய பிரஜை. பீட்டர் கிரெஸ்டே ஆஸ்திரேலியப் பிரஜை. இருவரையும் உடனடியாக விடுவிக்குமாறு அல்ஜசீரா கோரியுள்ளது. கடந்த வாரம் ஒரு பயங்கரவாத அமைப்பாக ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினருடன் சட்டவிரோத சந்திப்புகளை நடத்தியுள்ளதாகத்தான் இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. முன்னாள் அதிபர் மொஹமட் மோர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டது முதல் எகிப்தில் ஊடகங்களுக்கான சூழல் மிகவும் மோசமாக மாறிவிட்டது. இராணுவ ஆட்சியாளர்கள் நாட்டைப் பொறுப்பேற்றப் பின்னர் இஸ்லாமியவாத ஊடகங்கள் பல மூடப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

'சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கடற்படை முகாமுக்குள் ஓடினார்'

இலங்கையில் திருகோணமலை மாவட்டம்- குச்சவெளி பிரதேசத்தில் 4 வயது பெண் சிறுமி, கடற்படைச் சிப்பாய் என சந்தேகிக்கபடும் நபரொருவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த நபர் கடற்படை முகாமில் பணியாற்றும் சமையல்காரர் என்று இலங்கை காவல்துறை கூறுகிறது. திரியாய் கடற்படை முகாமுக்கு அண்மித்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியின் வீட்டிற்கு கறிவேப்பிலை தேவை எனக்கூறி வந்துள்ள இந்நபர், சிறுமியைத் தூக்கி மடியில் இருக்கச்செய்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இதனை அவதானித்த சிறுமியின் 12 வயது சகோதரி சத்தம்போட்டு தாயை வரவவழைக்க, அந்நபர் கடற்படை முகாமுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் குழந்தையின் தந்தை கூறுகின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய நபரை ஒரு வருடமாக சீருடையிலும் சிவில் உடையிலும் தான் கண்டுள்ளதாக கூறும் குழந்தையின் தந்தை, சம்பவத்தின் போது சிவில் உடையில் தான் அவர் வந்ததாகவும் தெரிவிக்கின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கடற்படைச் சிப்பாய் என குழந்தையின் தந்தை சந்தேகம் வெளியிட்டாலும், இலங்கை காவல்துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகண அந்நபர் முகாமின் சமையல்காரன் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக திருகோணமலை அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். மருத்துவப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அந்நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை கூறுகின்றது.

மறைந்த நம்மாழ்வார் உடல் கரூர் அருகே 'வானகம்' வேளாண் பண்ணையில் அடக்கம் செய்யப்பட உள்ளது

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா, இளங்காடு கிராமத்தை சேர்ந்தவர் நம்மாழ்வார் (74). மே 10, 1938ல் பிறந்த அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி. (விவசாயம்) பட்டம் பெற்றார். கோவில்பட்டியில் உள்ள வேளாண் மண்டல ஆய்வு நிலையத்தில் 1963 ஆம் ஆண்டில் ஆய்வு உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு தொடர்ந்து 6 ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர் வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ரசாயன உரம், ரசாயன பூச்சிக் கொல்லி பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பணியிலிருந்து விலகினார். தொடர்ந்து, வேளாண்மையில் வீரிய மிக்க விதைகள், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி பயன்பாட்டுக்கு எதிராகவும், இயற்கை வழி வேளாண்மையை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வந்தார். மேலும், பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக கடுமையான விமர்சனங்களையும், ஆக்கபூர்வமான மாற்றுக் கருத்துகளையும் நம்மாழ்வார் முன் வைத்தார். ஈரோடு மாவட்டத்தில் இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2002 ஆம் ஆண்டில் நடைபயணம் மேற்கொண்டார். பின்னர், 2003 ஆம் ஆண்டில் பூம்புகாரிலிருந்து கல்லணை வரையும், புதுக்கோட்டையிலும் நடைபயணம் சென்றார். இதுபோல, வாழ்நாள் இறுதிவரை அவர் மக்கள் நலனுக்காகவும், சுற்றுச்சூழலைக் காக்கவும், இயற்கை விவசாயத்தை மக்களிடையே கொண்டு செல்வதற்காகவும் பாடுபட்டு வந்தார். கரூர் மாவட்டம் வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கி, அதனை மிகச் சிறப்பாக நடத்தி வந்த நம்மாழ்வார், இயற்கை வேளாண் முறைகளின் மூலம் பல்லுயிர் வாழும் கானகமாகவே அந்தப் பண்ணையை மாற்றினார். இயற்கை வேளாண்மையையொட்டிய பல்வேறு நூல்களை எழுதிய இவர், தனது வயதையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கருத்தரங்குகளில் பங்கேற்று, அடுத்தத் தலைமுறைக்கு இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. 253 அமைப்புசாரா அமைப்புகளுக்கு அமைப்பாளராகவும் இருந்தார், இவருக்கு சாவித்திரி என்ற மனைவியும், மீனா என்ற மகளும் உள்ளனர், பேரிகை என்ற பெயரில் மாத இதழ் ஒன்றையும் வெளியிட்டு வந்தார், சமீப காலமாக மத்திய அரசு அறிவித்த மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்தும், கிராமப்புற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த சில நாட்களாக, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அத்திவெட்டி கிராமத்தில் உள்ள, லெனின் என்பவர் வீட்டில் தங்கி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலம் பாதித்தது. திங்கள்கிழமை இரவு, 8 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, அவர் மரணமடைந்தார். அவரது உடல், கரூர் மாவட்டம், சுருமான்பட்டி, 'வானகம்' வேளாண் பண்ணையில் 01.01.2014 புதன்கிழமை அடக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரது உடல் தஞ்சையில் உள்ள பாரத் கல்லூரியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

என்னைப்போல யாரும் கஷ்டப்படக் கூடாது! பூரண மதுவிலக்கு கோரி 4ம் வகுப்பு மாணவி உண்ணாவிரதம்!

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 4ம் வகுப்பு மாணவி செவ்வாய்க்கிழமை காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மதுரையைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி ஜோதிமணி. இவர், தனது தந்தை மோகன் ராஜ் உடன் இணைந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதம் குறித்து நக்கீரன் இணையதளத்திடம் மாணவி ஜோதிமணி கூறியதாவது, "எனது அப்பா குடிபழக்கத்துக்கு ஆளானார். அவர் அந்த பழக்கத்திற்கு ஆளானபோது எங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டது. எனக்கு ஸ்கூல் பீசு கூட கட்டமுடியல. ஸ்கூல் படிப்ப நிறுத்தலாமா என்ற நிலைமைக் கூட வந்தது. இப்ப எங்க அப்பா நல்லாயிட்டாரு. எங்க அப்பா குடிக்கிறதில்ல. எங்க குடும்பத்தைப் போல வேறு எந்த குடும்பமும் கஷ்டப்படக் கூடாது. என்னைப்போல எந்த பசங்களும், யாரும் கஷ்டப்படக் கூடாது. எந்த பசங்களும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது. அதுக்காகத்தான் இந்த உண்ணாவிரதம். எங்க அப்பா போல மற்ற அப்பாக்களும் இந்த பழக்கத்தை நிறுத்திவிட்டு என்னைப் போன்ற குழந்தைகளை நன்றாக பாத்துக்கனும். தமிழக அரசும் தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்" என்றார். மோகன் ராஜ் கூறுகையில், நான் குடிப்பழகத்தில் இருந்து மீண்டுள்ளேன். என்னைப்போல அந்த பழக்கத்திற்கு ஆளானவர்கள் மீளவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று மதுவிற்பனை கூடிக்கொண்டே இருக்கிறது, அரசே குடி குடி என்று சொல்வதைப்போல இருக்கிறது, குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துள்ளது என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழக அரசும் மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும். மக்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறும் தமிழக முதல் அமைச்சர், இந்த மதுவிலக்கையும் அமுல்படுத்தவேண்டும் என்றார்.

Monday, December 30, 2013

மன்னார் புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தோண்டும் நடவடிக்கை நேற்று இரண்டாவது தடவையாகவும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்றாம் ஆம் திகதி வரையில் புதை குழியைத் தோண்டும் பணி இடம் பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் மன்னார் நீதிவான் மற்றும் மன்னார் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் குறித்த இடத்தைத் தோண்டும் பணிகள் கடந்த 22 ஆம் திகதி வரை நடைபெற்றன. அங்கு 11 மனிதச் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பிலிருந்து விசேட நிபுணர் குழுவினர் வருகை தந்து, அவர்கள் முன்னிலையில் குறித்த மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்காக டிசெம்பர் 28ஆம் திகதி வரை அகழும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் கொழும்பிலிருந்து வந்த விசேட நிபுணர் குழுவினர் முன்னிலையில் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பமாகின. மன்னார் நீதிவான், கொழும்பிலிருந்து சென்ற விசேட நிபுணர் குழுவினர், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் நிலையைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையில் இந்த மனிதப் புதைகுழி நேற்றுமுன் தினம் தோண்டப்பட்டபோது ஏற்கனவே மீட்கப்பட்ட 11 மனித எச்சங்களின் முழுமையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அத்துடன் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மீண்டும் குறித்த புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று திடீரென்று தோண்டும் பணி இரண்டாவது தடவையாக நிறுத்தப்பட்டது. புதுவருடத்துக்காகவே புதைகுழியைத் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன என்றும், எதிர்வரும் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து குறித்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, அங்கு தோண்டத் தோண்ட மனித எச்சங்கள் காணப்படுவதால் அது மாபெரும் மனிதப் புதைகுழி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் இந்தப் புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள விசேட நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்களை முன்வைக்க ஏற்பாடு? -அ.நிக்ஸன்-

சர்வதேச அழுத்தம் என்பது அரசாங்கத்துக்கு அவ்வப்போது சிறிய அச்சத்தை ஏற்படுத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான கருவியாக அமைந்து விடுகின்றன. சிங்கள பௌத்த தேசியவாத வளர்ச்சிக்கும் வலுச்சேர்க்கின்றன. அதன் காரணமாக சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைச் சபையின் பொறுப்பை பௌத்த தேரர்கள் எற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைககள் தீவிரமடைந்து வருகின்றன. வெளியுறவு அமைச்சுக்கும் மனித உரிமைகள் அமைச்சுக்கும் ஜனாதிபதி கடும் உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றார். விசேட அதிகாரிகள் குழு ஒன்றை அமைப்பது, வடக்கு கிழக்கில் இருக்கும் பொது நிலையினர், கல்விமான்கள் அடங்கிய குழு மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அமைப்பது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இம்முறை ஜெனிவாவுக்கு செல்லும் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் போருக்கு பிந்திய செயற்பாடுகளை ஆதரங்களுடன் நிரூபிக்கும் வகையில் பேச வேண்டும் என்ற உத்தரவு ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. கொழும்பிலும் சந்திப்புகள்:- மார்ச் மாதத்திற்கு முன்னர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து போருக்கு பிந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் மனித உhமைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் அதற்காக சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்றை அமைச்சர் பேராசியர் பீரிஸ் நியமித்துள்ளார் என்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த செயற்திட்டம் நடைபெறுவதாகவும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். 2014 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் உறுப்பு நாடுகள் முன்வைக்கவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்கும் எனவும் அது இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அரசாங்கத்தின் உயர்மட்டம் கருகின்றது. அந்த பாதிப்புகள் பொருளாதார ரீதியில் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் தங்கள் பக்க நியப்பாடுகளை முடிந்தவரை எடுத்துரைக்க அரசாங்கம் திவீரமாக ஈடுபடவுள்ளது என்ற தகவல் வெளியில் கசிந்துள்ளன. ஆணைக்குழு அறிக்கை புடிப்பினைகள் மீளிணக்க ஆணைக்குழவின் அறிக்கையில் உள்ள முக்கியமான நான்கு சிபாரிசுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தன. கடந்த வருடம் ஜெனீவா தீர்மானத்திலும் கூறப்பட்டிருந்தது. ஆனால் உரிய முறையில் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணு எண்ணிக்கைகளை குறைப்பது. சிவிலி நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகளை நீக்குவது போன்ற விடயங்கள் அரசாங்கத்தினால் செய்யப்படவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, முன்னாள் போராளிகளின் விடுதலை, விடுதலை செய்யப்பட்ட போராளிகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் பலவீனமான செயற்பாடுகள் காணப்படுகின்றன. குறித்த இந்த விடயங்களில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கம் ஒப்பாசாரத்தக்கேனும் சில விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன. நிரந்தர அரசியல் தீர்வு குறித்த விடயங்களிலும் முன்னேற்றம் இல்லை என்ற காரணத்தினால் தென் ஆபிரிக்க மத்தியஸத்தம் பற்றிய பேச்சுக்கள் அடிப்பட்டன. அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா அந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரை எதிர்கொள்ளவுள்ள அரசாங்கம் மேற்படி அணுகுமுறைகள் மூலம் குறைந்த பட்சமான சாதகமான நிலைமையை தோற்றுவிக்க முற்படுகின்றது. ஆனாலும் அது காலம் கடந்துவிட்ட அணுகுமுறை என்றுதான் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் கூறுகின்றனர். ஆயர்கள் அழைக்கப்படலாம்:- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் அரசாங்கங்களின் பிரதிநிதிகள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும். வேறு அரசியல் கட்சிகள் அல்லது வேறு பிரதிநிதிகள் யாரும் அதிகாரபூர்மாக பங்குபற்ற முடியாது. ஆனால் கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில்; மண்டபத்துக்கு வெளியே அரசசார்பற்ற நிறுவனங்களின் விளக்கமளிக்கும் சிறிய கூட்டங்கள், செயற்பாட்டு திட்டங்கள், ஆலோசணைக் கூட்டங்கள் நடைபெறும். அவ்வாறான கலந்துரையாடல்களுக்கு இம்முறை வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையினால் சிலர் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் அவ்வாறு அழைக்கப்படுபவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் எழுகின்றமையினால் அந்த முயற்சியை மனித உரிமைச் சபை கைவிடக்கூடிய நிலையும் உண்டு. எனினும் ஆயர்களை அழைப்பதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக வட்டாரங்கள்; குறிப்பிட்டன. மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்தும் நேரடியாகவும் பக்கச்சார்பு அற்ற முறையிலும் அறிந்து கொள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை முயற்சிக்கின்றார் என்பதுதான் உள்ளக தகவல்கள். அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதிகள் இந்த வாரம் கொழும்புக்கு வரவுள்ளமைக்கான காரணங்களும் அதுதான். அரசாங்கத்தக்கு சாதாகம்:- மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைச் சபையின் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள்; முக்கியம் பெறவுள்ளன. ஒன்று அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை. இரண்டாவது ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் நிபந்தனைகள், தீர்மானங்கள். ஆனால் அவற்றை அரசாங்கம் எவ்வாறு ஏற்கும் என்பதும் அந்த இரண்டு விடயங்களும் அனைத்து நாடுகளினாலும் முழுமையாக ஏற்கப்படுமா என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் இம்முறை சினா மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளமை இலங்கைக்கு சாதகமான விடயம். ஆகவே அடுத்த ஆண்டு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைச் சபையும் அமெரிக்காவும் இன்னும் கூடுதல் வேலைத்திட்டங்களில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் உலக அரசியல் ஒழுங்கு அதற்கு இடமளிக்குமா என்பது மற்றுமொரு கேள்வி. இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தாலும் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க அனுமதிக்கமாட்டர்கள் என்பது கண்கூடு. ஏனெனில் அது இந்திய வெளியுறவுக் கொள்கையுடன் சம்மந்தப்பட்டது. எனவே ஜியோ பொலிற்றிக்ஸ் எனப்படும் பிராந்திய அரசியல் நலனில் இருந்து விடுபட்டு இலங்கையில் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் சிந்தித்தால் மாத்திரமே இலங்கை அரசாங்கத்தின் போக்கில் மாற்றத்தை எற்படுத்த முடியும்? இல்லையேல் சர்வதேச அழுத்தங்கள் என்பது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு சிறிய அச்சங்களை அவ்வப்போது ஏற்படுத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான கருவியாக அது அமைந்து விடுகின்றது. சிங்கள பௌத்த தேசியவாத வளர்ச்சிக்கும் வலுச் சேர்க்கின்றன. அதன் காரணமாகவே சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைச் சபையின் பொறுப்பை பௌத்த தேரர்கள் எற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினா் ராதிகா யாழ்ப்பாணத்தில்

கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். .எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமுள்ளிட்ட பல பகுதிகளையும் நேரினில் சென்று பார்வையிட்டார். குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு பிரதேசம் மற்றும் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களை கூட்டமைப்பு சார்பு வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் நேரினில் அழைத்து சென்று காண்பித்தார்.நாளை முல்லைதீவிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே ராதிகா சிற்சபேசனது யாழ் பயணம் தொடர்பாக செய்தி சேகரிக்க முடியாத அளவிற்கு இராணுவப்புலனாய்வு பிரிவினர் ஈக்கள் போல மொய்த்து திரிவதாக தெரிவிக்கும் உள்ளுர் ஊடகவியலாளர்கள் அதே வேளை அவரையும் சிக்க வைக்க ஊடகங்களினில் புகைப்படங்களுடன் செய்திகளை அறிக்கையிட கோரிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினா் ராதிகா யாழ்ப்பாணத்தில்:- செய்தி திருத்தம் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் நேற்று முன்தினம் (28.13.12) இலங்கை சென்று இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்புக்களை மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்; மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து பல பொது அமைப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்களின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் சென்று மக்களுடன் உரையாடியுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இந்த முகாமிற்கு சென்று மக்களைச் சந்தித்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காதான் உலக அமைதிக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல்'

உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அமெரிக்காதான் என்று உலக மக்களில் கால் பங்கினர் கருதுவதாக சர்வதேச ஆய்வு ஒன்று கணிக்கிறது. வின்/கேலப் இண்டர்னேஷனல் அமைப்பால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு , 65 நாடுகளில் சுமார் 67,000 பேரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலோனோர் மத்தியில், மக்கள் இடம் பெயர்ந்து குடியேறத் தகுதியான நாடு அமெரிக்காதான் என்ற கருத்தும் இருப்பதாக, இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆய்வில் பங்கெடுத்துக்கொண்டோரில் ஏறக்குறைய பாதிப்பேர் , வரும் ஆண்டு, முடியப்போகும் 2013ஐ விட சற்று மேலும் நன்றாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினர். உலகில் அரசியல்வாதிகள் பெரும்பாலோர் பெண்களாக இருந்தால், உலகம் இன்னும் மேம்பட்டதாக இருக்கும் என்று மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் கருதினர்.

கிட்டத்தட்ட 70 ஊடகவியலாளர்களாவது கொல்லப்பட்டுள்ளதாக!

சிரியாவில் தொடரும் மோதல்களும், இராக்கில் அதிகரித்து வரும் மதக்குழுக்களிடையேயான தாக்குதல்களும், மத்திய கிழக்குப் பகுதியை, பத்திரிக்கையாளர்களின் "கொலைக்களமாக" மாற்றி வருவதாக ஒரு முன்னணி ஊடக சுதந்திரக் குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, கடமையில் ஈடுபட்டிருந்தபோது கிட்டத்தட்ட 70 ஊடகவியலாளர்களாவது கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மத்திய கிழக்கில் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஊடகவியலாளர் பாதுகாப்புக்காக செயல்படும் குழு (Committee to Protect Journalists) என்ற இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் இந்த வருடம் குறைந்தது, 29 செய்தியாளர்களாவது கொல்லப்பட்டுள்ள நிலையில், சிரியாவில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு என்பது மிகவும் மோசமாகவே இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் போரில் ஈடுபடாத சிவிலியன்கள்தான் என்ற நிலையை மதிக்குமாறு இந்தக் குழு, அரசாங்கம் மற்றும் ஆயுத குழுக்களைக் கோரியிருக்கிறது. மேலும் பத்திரிக்கையாளர்களைத் தாக்கிக் கொல்பவர்களை நீதியின்முன் கொண்டுவர உதவுமாறும் அது கோரியுள்ளது.

ரஷ்ய நகரில் மீண்டும் குண்டுத் தாக்குதல்,குறைந்தது 12 பேர் பலிர் பலி

குண்டுத்தாக்குதலில் அழிந்த ட்ராலிபஸ் ரஷ்ய நகரான வொல்கோக்ராடில் மின்சார பஸ் ஒன்றின் மீது நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ட்ராலிபஸ் என்றழைக்கப்படும் இந்த மின்சார பஸ் ஒரு ஜனசந்தடிமிக்க பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில், இந்த பஸ் ஏறக்குறைய முழுதுமாக அழிந்தது. நேற்றுதான் இந்த நகரின் மத்திய ரயில் நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
குண்டுத்தாக்குதல் நடந்த இடம் இந்த ட்ராலிபஸ் வெடிகுண்டுத் தாக்குதலை, ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று ரஷ்ய அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். விசாரணை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் கருங்கடல் பகுதி வாசத்தல நகரான சோச்சியில் மழைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் இரண்டுமே, பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகப்படுத்தியுள்ளன. இந்த மழைக்கால ஒலிம்பிக்ஸ் நடக்கும் இடம் ரஷ்யாவின் கொந்தளிப்பான, வட காகசஸ் பகுதியில் அமைந்திருக்கிறது.

''மக்கள் பாதுகாப்பு கழகம்'' - தமிழ்நாட்டில் புதுக்கட்சி உதயம்

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு ‘’மக்கள் பாதுகாப்பு கழகம்’’ என்று பெயர் சூட்டி தொடங்கப்பட உள்ளது. இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கார் வக்கீல்கள் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் பதவி ஏற்பார். மேலும் இந்த கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தென் சென்னை தொகுதியில் புதிய கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் நான் போட்டியிட உள்ளேன். புதிய அரசியல் கட்சியான மக்கள் பாதுகாப்பு கழகம் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும். தற் போதுள்ள அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் கட்சி களின் முக்கிய நோக்கமாகும். இது நடைமுறையில் சாத்தியமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். மக்களிடம் இந்த 2 கட்சிகளின் நல்ல எண்ணம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த சில ஆண்டு களுக்குள் எங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்’’என்று தெரிவித்தார்.

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும்: பழ.நெடுமாறன்

தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் நீரின்றி அமையாது நில வளம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ் வார், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா தொடர்பாக விளார் ஊராட்சி மன்ற தலைவர் அளித்த நோட்டீசை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன் அறிப்பு இன்றி நோட்டீஸ் அனுப்புவது சட்டத்திற்கு புறம்பானது என உயர் நீதி மன்றம் அறிவித் துள்ளது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை விளார் ஊராட்சி மன்ற தலைவர் பார்வையிட விரும்பினால் பார்க்கலாம். அதில் திருப்தி இல்லை என்றால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதிலும் எங்கள் பதிலை கேட்டு திருப்தி இல்லை என்றால் வேறு நடவடிக்கை எடுக்கலாம். முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் சட்டத்தை மீறி கட்டிடம் கட்டப்படவில்லை. சட்டப்படிதான் கட்டி உள்ளோம். எங்களது சொந்த இடத்தில் தான் கட்டி உள்ளோம். இது தொடர்பான வழக்கு எங்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். முள்ளி வாய்க்கால் எதிரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அரசுஅனுமதி பெற்று தான் பூங்கா அமைத்துள் ளோம். அதனை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என்று அரசு கூறி வருகிறது.இது தொடர்பான வழக்கு வருகிற 2–ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம். முற்றம் காப்போம் ரெயில் பயண நிகழ்ச்சி ஜனவரி 4, 5 –ந் தேதிகளில் நடக்கிறது. 4–ந் தேதி சென்னையில் இருந்து சேலம் வரையிலும், 5–ந் தேதி ராமேஸ்வரம், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை வழியாக சென்னைக்கும் ரெயில் பயணம் நடைபெறுகிறது’’என்று கூறினார்.

டி.ராஜேந்தர் விலகினாலும் தொடர்ந்து செயல்படும் லட்சிய திமுக :நெல்லையில் மாநில மாநாடு!

லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் திடீரென கட்சிப் பொறுப்பிலிருந்து விலகி கலைஞர் முன்னி லையில் தன்னை தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டார். இதனால் லட்சிய திமுக கட்சி கலைக்கப் பட்டதா என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் டி.ராஜேந்தர் கட்சியை விட்டு விலகினாலும் லட்சிய திமுக தொடர்ந்து செயல்படும் என்று அக்கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளரும், மாநில கொள்கை பரப்பு செயலாளருமான ரோலக்ஸ் பாலன் தெரிவித்துள்ளார். அவர், ‘’டி.ராஜேந்தர் ஏழு ஆண்டுகளாக கட்சி நடத்தினாலும் இதுவரை கட்சிக்காக எதையும்செய்யவில்லை. அவர், தி.மு.க.வில் இணைந்தது கூட, ஏதோ பிரச்னையால் எடுத்துள்ள முடிவுதான். கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜன.,5ம் தேதி ஈரோட்டில் நடக்கிறது என்றும் இதில் ராஜேந்தரின் தம்பியும் அமைப்பு செயலாளருமான டி.வாசு,மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர் என்றும் கூறினார்.தொடர்ந்து வரும் பிப்ரவரி 23ல் நெல்லையில் மாநில மாநாட்டை நடத்துகிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

19 தொகுதி வேண்டும் : தி.மு.க.,விடம் கேட்கிறது தே.மு.தி.க.,

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு இரண்டாவது பெரிய கட்சி அந்தஸ்து வழங்கி, ஏழு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பேச்சுவார்த்தையை, திரைமறைவில் தி.மு.க., மேலிடம் துவக்கியதற்கு, தே.மு.தி.க., தரப்பு இன்னும் பிடி கொடுக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால், தங்களுக்கு, 19 லோக்சபா தொகுதிகளை தர வேண்டும் என, தே.மு.தி.க., பேரம் பேசுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

நரேந்திர மோடியோ, கெஜ்ரிவாலோ ராகுலுக்கு சமமாக மாட்டார்கள்: லாலு பிரசாத் யாதவ்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக, பிகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று முசாபர்நகர் சென்றார். அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அவல நிலைகள் குறித்து தொலைக்காட்சிகளில் பார்த்தேன். இந்த மக்களின் நலனுக்காக தொடக்கத்திலே நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இந்த மக்களின் கண்ணீரை துடைக்கவே நாங்கள் எல்லாரும் இங்கு வந்துள்ளோம். அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த வீடு திரும்ப மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி வைக்கும். ராகுல் காந்தி, ராகுல் காந்தி தான். அவருக்கு முன்னால் நரேந்திர மோடியோ, கெஜ்ரிவாலோ நிற்க முடியாது. மக்களாகிய நீங்கள் தான் அவர்களை (மோடி, கெஜ்ரிவால்) கொண்டாடுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்காக இதுவரை என்ன செய்தனர்? இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார். தீவன ஊழல்: கால்நடை தீவன ஊழல் வழக்கில்.குற்றவாளி என, அறிவிக்கப்பட்ட, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர், லாலு பிரசாத் யாதவிற்கு, 65 பீகாரில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, 1997ல் இருந்து, 2005 வரை ஆட்சி செய்தது. அப்போது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்ததோடு, ஊழலும் தலைவிரித்து ஆடியது.

தெற்கு ரஷ்யா: ரயில் நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்

ரஷ்யாவின் தென்னகரமான வோல்கோகிராட்டில் ரயில் நிலையமொன்றில் நடந்துள்ள தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய இந்தத் தாக்குதலில் 50 பேர்வரையில் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கூறுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பினரும் இன்னும் உரிமை கோரவில்லை. உள்ளூர் நேரப்படி 12.45 மணியளவில் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த அக்டோபரிலும் பேருந்தொன்றில் பெண் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படுபவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஸோச்சி நகரில் இன்னும் 6 வாரங்களில் நடக்கவுள்ள 2014-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆயுதக்குழுக்கள் வன்முறைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அரச மட்டத்தில் கவலைகள் உள்ளன. வடக்கு கோக்காசஸ் பிராந்தியத்தில் இயங்கும் கிளர்ச்சிப் படையினர் அண்மைய ஆண்டுகளாக ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இஸ்ரேல் - லெபனான் எல்லையில் முறுகல்

லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கட்டுகள் இஸ்ரேலின் வடபகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன. கிரியட் ஸ்மோனா நகருக்கு அருகே இந்த ராக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது. ஆனால், சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. தாம் பதிலுக்கு ஆர்ட்டிலறி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனானிய தீவிரவாத அமைப்பான ஹெஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான போரை அடுத்து, 2006ஆம் ஆண்டுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பெருமளவில் அமைதியாகவே இருந்து வந்தது. ஆனால், முன்னணி அரங்கப் பகுதியில் லெபனானிய இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதலில், வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த இரு வாரங்களாக அங்கு பதற்றம் அதிகரித்திருந்தது.

கூடுதல் அதிகாரங்களைக் கோருகிறது மனித உரிமைகள் ஆணையம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை பலப்படுத்துமாறு ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கோரியிருந்தார்

மீனவர்கள் பிரச்சனை : " ஜனவரி 20 சென்னையில் பேச்சுவார்த்தை"

இந்திய இலங்கை மீனவர்களிடையே ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் இதுபற்றி தங்களிடம் தெரிவித்ததாக, தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ உறுதிப்படுத்தினார். இந்திய அரசும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சும் கலந்துபேசியே இந்தத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் சல்மான் குர்ஷித் தங்களிடம் உறுதிப்படுத்தியதாக இளங்கோ கூறினார். மீனவர்களின் பிரதிநிதிகளை இக்கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதோடு தமிழக அரசின் சார்பில், குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல் இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசுகளின் சார்பிலும் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்குபெறுவார்கள் என்றும் தங்களுக்கு சொல்லப்பட்டுள்ளதாகவும் இளங்கோ கூறுகிறார். நிபந்தனைகள் இல்லை, கோரிக்கை உண்டு இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய தேசிய மீனவர் பேரவையின் சார்பில் எந்த முன் நிபந்தனைகளும் வைக்கப்படவில்லை என்றாலும், இலங்கை மற்றும் இந்தியச் சிறைகளிலுள்ள மீனவர்களும்- பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக இருநாட்டுச் சிறைகளிலிருந்தும் அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்பதை தம்மிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தியதாகவும் இந்திய தேசிய மீனவர் பேரவையின் தலைவர் கூறினார். ஆனால் விசைப்படகுகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று சல்மான் குர்ஷித் கூறியதாகவும் இளங்கோ சுட்டிக்காட்டினார். சென்னையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்னர் தமிழக முதல்வரை சந்திக்க இந்திய தேசிய மீனவர் பேரவை நேரம் கோரியுள்ளது என்றும் இளங்கோ தமிழோசையிடம் மேலும் தெரிவித்தார்.

Sunday, December 29, 2013

டில்லி முதல்வரானார் அரவிந்த் கேஜ்ரிவால்

டில்லி மாநில முதல் அமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர், அரவிந்த் கேஜ்ரிவால், இன்று பதவியேற்றார். டில்லியின் ராம்லீலா மைதானத்தில் திறந்த வெளியில் நடந்த விழா ஒன்றில் அவர் டில்லி முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஊழலுக்கெதிராகப் பிரச்சாரம் செய்து டில்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்த , ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், கேஜ்ரிவால், பதவிப் பிரமாண வைபவத்துக்கு ரெயிலில் வந்தார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜுங் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் ஆறு பேர் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தருகிறது.

ஆந்திரா ரெயில் தீ விபத்தில் 23 பேர் பலி

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்ததில், இரண்டு குழந்தைகள் உட்பட,குறைந்தது 23 பேராவது இதுவரை இறந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. ஆந்திர பிரதேசம் மாநிலம் வழியாகச் சென்று கொண்டிருந்த நன்டெட்-பெங்களூரு எக்ஸ்பிரஸின் ஒரு பெட்டியில் தீப்பிடித்தது என்று ரெயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இறந்தவர்களில் பலர் ரெயிலைச் சூழ்ந்த கரும்புகையினால் மூச்சடைப்பிற்கு உள்ளானதாக காவல் துறையினர் கூறுகிறார்கள். இந்தியாவில் ரெயில் விபத்துக்கள் ஏற்படுவது சகஜம் ( பழைய படம்) தற்போது அணைக்கப்பட்ட இந்தத் தீ எப்படி மூண்டது என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இன்று காலை இந்திய நேரப்படி 3.30 மணி அளவில் குளிரூட்டப்பட்ட (ஏ.சி) பெட்டியில் இந்தத் தீ மூண்ட போது அதில் 60க்கும் அதிகமான பயணிகள் பயணித்து கொண்டிருந்தனர். மிகுந்த பனி மற்றும் பனிப்புகையினாலும் மீட்புப் பணிகள் பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இறந்தவர்களின் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை . இந்தியாவில் ஒரு நாளைக்கு 18 மில்லியன் பயணிகளை ஏந்திச் செல்லும் சுமார் 9000 பயணிகள் ரயில்களை கொண்ட இந்திய அரசுக்கு சொந்தமான ரயில் சேவைகளில் விபத்துகள் நடப்பது சகஜமானதாகும். கடந்த வருடம் ஆந்திரத்தில் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் வரை இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்து : இரு பல்கலைக் கழக கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டனa

எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்கள் இரண்டு பல்கலைக்கழக கட்டிடங்களுக்கு தீ வைத்ததாக அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. அல்-அஸார் பல்கலைக்கழகத்தின் கெய்ரோ வளாகத்தில் மாணவர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். கெய்ரோவின் தெற்கு மின்யா மற்றும் நைல் டெல்டா ஆகிய இடங்களில் வெள்ளியன்று பொலிஸார், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவாளர்களுடன் மோதியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவரான முஹமட் மோர்சி அவர்கள் கடந்த ஜூலையில் இராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டது முதல், அந்தக் கட்சி மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த அமைப்பு கடந்த புதன்கிழமை முதல் முறைப்படி ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா : ''ஒரு குழந்தை'' திட்டம் தளர்த்தப்படுகிறது

சீனாவில் '' ஒரு குழந்தை'' திட்டத்தை தளர்த்துவதற்கான சட்டம் ஒன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கணவன் மற்றும் மனைவி, இருவரில் ஒருவர் தமது குடும்பத்தில் தான் மாத்திரமே, ஒரே குழந்தையாக இருந்தால், அந்தத் தம்பதி இரு குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அனுமதிக்கும் தீர்மானத்தை தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு நிறைவேற்றியுள்ளது. இந்த மாற்றத்துக்கான கொள்கை, நவம்பரில், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் அதிகாரிகளின் கூட்டம் ஒன்றை அடுத்து அறிவிக்கப்பட்டிருந்தது. கடூழிய முகாம்கள் மூலமான மறுகல்வி வழங்கும் திட்டத்தை ரத்துச் செய்வதற்கான ஒரு பிரேரணைக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மீண்டும் போலியோ பணியாளர் கொலை

பாகிஸ்தானின் வடமேற்கு ஹைபர் பக்துன்ஹாவா மாகாணத்தில் இரு ஆயுததாரிகள் ஒரு போலியோ பணியாளரைச் சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெஷாவார் நகரின் எல்லைப் பகுதியில் இருந்த தடுப்பு மருந்து நிலையத்தில், ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தி நுழைந்தபோது, மேலும் ஒரு மருத்துவமனைப் பணியாளரும் காயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலை யார் நடத்தினரகள் என்று தெரியவில்லை, ஆனால், தலிபான்களே போலியோ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் சிறுவர்களை மலடாக்குவதாகவும், போலியோ பணியாளர்கள் உளவாளிகளாகச் செயற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். போலியோ தொற்றுகின்ற நாடாக இன்னமும் உலகில் உள்ள மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும். அண்மைக்காலமாக அந்த நோய் தொற்றுவது அதிகரித்தும் உள்ளது.

திருகோணமலை: வெடிபொருள் வெடித்து சிறுவன் பலி, 2 சிறார்கள் காயம்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை- குச்சவெளி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை வெடிபொருள் ஒன்று வெடித்ததில் 5 வயது சிறுவன் ஒருவன் பலியானதோடு மேலும் இரண்டு சிறார்கள் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார். குச்சவெளியில் செந்நூர் என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சிறார்களும் உயிரிழந்த சிறுவனின் 10 வயது சகோதரனும் 3 வயது சகோதரியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது தமது வீடு அமைந்துள்ள காணிக்குள் இந்தச் சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடைத்த மர்ம பொருளொன்றில் அவர்கள் ஆணி அடித்து பார்த்துள்ளனர். அதன்போதே அந்தப் பொருள் வெடித்துச் சிதறியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த சிறார்கள் மூவரும் திருகோணமலை அரசினர் மருத்துமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளான். மற்யை இருவரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக மருத்துவமனைத் தகவல்கள் கூறுகின்றன. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக காவல்துறை கூறுகின்றது. அதேவேளை குச்சவெளி பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னொரு வெடிபொருள் வெடிப்புச் சம்பவத்தில் யானையொன்றும் காயமடைந்துள்ளது. வெடிபொருளொன்றை உட்கொள்ள முயன்றபோதே யானை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களால் யானை மீட்கப்பட்டு வனஜீவராசிகள் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

'மாத்தளை புதைகுழி எலும்புகளை சீனாவுக்கு அனுப்பக் கூடாது

இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மருத்துவமனைக் கட்டடமொன்றுக்கான அத்திவாரம் தோண்டும்போது ஓராண்டுக்கு முன்னர் கிடைத்த மனித எலும்புகளை மேலதிக பரிசோதனைக்காக சீனாவுக்கு அனுப்பும் அரசின் திட்டத்துக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஜேவிபி கிளர்ச்சி ஒடுக்கப்பட்டபோது காணாமல்போனவர்களின் உடல்களே மாத்தளை புதைகுழியில் கிடைத்திருக்கலாம் என்று உறவினர்கள் நம்புகின்றனர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய, காணாமல்போனோரின் உறவினர்கள் தமது எதிர்ப்பை எழுத்துமூலமாக நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணியான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சீனா, இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைப் பேணுவதனால் அதன் பரிசோதனை முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று அவர் கூறினார். மாத்தளை புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன. சீனாவில் நடத்தப்படும் இரசாயன பரிசோதனை மூலம் நீதி கிடைக்காது என்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் கருதுவதாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சீனா தவிர்ந்த ஜனநாயக மரபுகளைப் பேணுகின்ற வேறொரு நாட்டில் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் கூறினார். மாத்தளை மனிதப் புதைகுழியில் இருந்து 154 மனித மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன. 1988-89 காலப்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சி ஒடுக்கப்பட்டபோது காணாமல்போனவர்களின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்

மன்னார் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் தொடங்கின

இலங்கையின் வடமேற்கே வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை அண்டிய மாந்தை சந்திக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில், சட்ட வைத்திய நிபுணர் டாக்டர் வைத்தியரத்ன தலைமையிலான சட்ட வைத்திய அதிகாரிகள், ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறை மாணவர்கள், உடற்கூறியல் நிபுணர், தொல்பொருளாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பொலிசாரின் உதவியோடு இந்தப் புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். முதற்கட்டமாக, மனித உடல் எச்சங்கள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள நிலத்தைத் தோண்டும் பணிகள் இன்று காலை முதல் நடைபெற்றன. எனினும் புதிதாக எதுவும் கண்டுபிடிக்கப்படாத போதிலும், மேலும் மனித உடல் எச்சங்கள் அவ்விடத்தில் இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. புதைகுழியை தோண்டும் பணிகள் நாளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. முன்னாள் அதியுயர் பாதுகாப்பு பிரதேசம் முன்னர் அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்திலேயே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் முழுமையாக மீள்குடியமராத காரணத்தினால் இநதப் பகுதி பற்றைக் காடாகக் காணப்படுகின்றது. இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித உடல் எச்சங்களுக்கு உரியவர்கள் யார், அவர்கள் எப்படி- யாரால் இங்கு புதைக்கப்பட்டனர் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கையும் அதையொட்டிய விசாரணைகளும் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்திருக்கின்றனர். இந்த மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் கோரியிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தண்ணீருக்கு பதில் பெட்ரோல் வைத்தார்கள்”: தமிழ் பிரபாகரன்

விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ம.க. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது உளவியல்ரீதியில் துன்புறுத்தியப்பட்டதாக தெரிவித்தார்

Saturday, December 28, 2013

காரைக்காலில் இருமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்

பாண்டிச்சேரியை அடுத்த காரைக்காலுக்கு சிநேகிதியுடன் வந்த திருவாரூரைச்சேர்ந்த 21 வயது பெண், அடுத்தடுத்து இரண்டு முறை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக புதுச்சேரி காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார். தனது தோழி ஒருவருடன், காரைக்காலில் இருந்த தமது நண்பர் ஒருவரை பார்க்க அவர் வந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு அவர் இருமுறை பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்திருக்கிறார். இந்த பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது சிநேகிதியும் திருவாரூரிலிருந்து காரைக்காலில் இருக்கும் அந்த சிநேகிதியின் நண்பரை பார்க்க வந்தனர். வந்த இடத்தில், அவரது சிநேகிதி உடல்நிலை சரியில்லாமல்போய் வாந்தியெடுத்ததைத் தொடர்ந்து இவர்கள் அவரது காரைக்காலில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குள் அவரது சிநேகிதியும் நண்பர்களும் சென்றிருந்தனர். அப்போது இந்த குறிப்பிட்ட பெண் வீட்டுக்கு வெளியில் நின்றிருந்த நேரம் அவரை மூன்று ஆண்கள் கடத்திச் சென்று அதில் ஒருவர் அவரை பாலியல்ரீதியில் பலாத்காரம் செய்ததாகவும், அந்த தாக்குதல் முடிந்த நிலையில் அந்த பெண் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் பேசி, அவரது நண்பர்கள் அவர் இருந்த இடத்திற்கு வந்து அவரை அழைத்துச் சென்றுகொண்டிருந்த நிலையில், அவரை எதிர்கொண்ட மற்றொரு கும்பல் ஆண்கள் இந்த பெண்ணை மட்டும் வழிமறித்து அவரை தனியானதொரு இடத்திற்கு கொண்டு சென்று ஆறுமுறை அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருத்தியதாகவும் அந்த பெண் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இதுவரை பன்னிரெண்டு பேர் கைது இதில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் பத்துபேர் பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு 15 நாள் காவலுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மற்றும் ஒருவரை இன்று காவல்துறை கைது செய்திருக்கிறது. மற்றொருவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார். இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். இதில் முதலாவது சம்பவத்தில் அவரை பாலியல் பலாத்காரம் செய்தவர் ஆட்டோ ஓட்டுநர் என்றும் இரண்டாவதாக அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குழுவில் இருந்தவர்கள் அனைவரும் தங்களின் இருபதுகளில் இருந்த இளைஞர்கள் என்றும் அந்த பெண் கூறினார். இந்த இரண்டாவது பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். புகாரை பதிவு செய்வதில் காவல்துறையினர் தாமதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பதிவு செய்வதில் தாமதம் செய்ததற்காக, உள்ளூர் தலைமை காவல் அதிகாரி மற்றும் நிலைய எழுத்தர் ஆகிய இருவரை பணிநீக்கம் செய்திருப்பதாக புதுச்சேரி காவல்துறை உயரதிகாரி மோனிகா பரத்வாஜ் தெரிவித்தார். அவர்கள் மீதான விசாரணைகள் நடந்துவருவதாகவும், அவை முடிந்தபிறகுதான் அவர்கள் ஏன் புகாரை பதிவு செய்வதில் தாமதம் காட்டினார்கள் என்கிற விவரங்களை தம்மால் கூறமுடியும் என்றும் அவர் கூறினார். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Friday, December 27, 2013

எஸ்.ஏ.ஆர்-401 என்ற இயந்திர மனிதன்

அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு வேலை செய்யும் வகையில் ரஷியா 2014ஆம் ஆண்டு இயந்திர மனிதனை அனுப்பி விடும். ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவின் விண்வெளி வீரர் பயற்சித் தளத்தில் எஸ்.ஏ.ஆர்-401 என்ற இயந்திர மனிதன் காட்சிக்கு வைக்கப்பட்டது. எதிர்காலத்தில் அமெரிக்க நாசா விண்வெளி மையத்தின் இயந்திர மனிதன்களுடன் இணைந்து அது வேலை செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.
சந்திரன் மண்டலத்தில், காற்று மற்றும் நீர் குறைவாக இருப்பாதல், தாவரங்கள் வளர்வதற்கு உகந்த சூழ்நிலை இல்லை. ஆனால், 2015ஆம் ஆண்டு சந்திரனில் காய்கறிகள் போன்ற பல தரவரங்களைப் பயிரிடப் போவதாக, அமெரிக்க நாசா விண்வெளி மையம் அண்மையில் அறிவித்தது. மனிதர் வரலாற்றில் இத்தகைய முயற்சி இதுவே முதல்முறை என்பது குறி்ப்பிடத்தக்கது. தாவரங்கள் சந்திரனில் வளர்ப்பது வெற்றியடைந்தால், மனிதர் அங்கு பல பத்து ஆண்டுகளுக்கு அதிகமாக வாழலாம் என கருதப்படுகிறது.

மத்திய ஆபிரிக்க வன்முறைகளில் 40 பேர் பலி

மத்திய ஆபிரிக்காவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நாற்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதி காக்கும் படையினர் மீது கிறிஸ்தவ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் ஆறு அமைதி காக்கும் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆபிரிக்க ஒன்றிய மற்றும் பிரான்ஸ் படையினர் மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மத்திய ஆபிரிக்காவில் கிறிஸ்தவ முஸ்லிம் குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த 4000 படையினரும், பிரான்ஸைச் சேர்ந்த 1600 படையினரும் மத்திய ஆபிரிக்காவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விரைவில் ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இஸ்ரேல் மற்றம் பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகள் நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ள உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலிய ஜனாதிபதி சிமோன் பெரஸ் மற்றும் பலஸ்தீன தலைவர் முஹமட் அப்பாஸ் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். விவசாயம், சுற்றுலாத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில் வாய்ப்பு ஆகிய துறைகளில் குறித்த நாடுகளுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இஸ்ரேலிய ஆயுதங்களை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது,

இலங்கையின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்ய US நடவடிக்கை: நிஷாதேசாய் பிஸ்வால் இலங்கை செல்வார்:

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் குறித்து பெறப்பட்ட முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்வதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலை, அமெரிக்கா அடுத்த மாதம் இலங்கைக்கு அனுப்பவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வுக்கு முன்னர் இந்த மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கத்திலேயே புதிதாக நியமனம் பெற்றுள்ள உதவிச் செயலாளர் நிஷா தேசாயை அமெரிக்கா அனுப்பவுள்ளது. ஜனவரி இரண்டாம் வாரத்தில் இலங்கை செல்லவுள்ள நிஷா தேசாய், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களுடன் பேசவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க அனுசரணையில் இலங்கை தொட்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் கொண்டுவந்த தீர்மானம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி இவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் பேசவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாதேசாய் அமெரிக்க துணை செயலாளராக நியமனம். அமெரிக்க செனட் சபையின் வெளியுறவுக்குழு அனுமதியளித்ததை அடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிஷாதேசாய் அந்நாட்டின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான அமெரிக்க துணைச் செயலாளராக தேசாய் பிஸ்வால் என்பவரைநியமிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த ஜுலை மாதம்பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரை தொடர்பாக அந்நாட்டுசெனட் சபையின் வெளியுறவுக் குழுவில்விவாதிக்கப்பட்டது. விவாதத்துக்கு பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரதுநியமனத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான அவர், அமெரிக்க துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவிடுக! மன்மோகனுக்கு வைகோ தொலைநகலில் கடிதம் -

இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழகச்செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய உதவிடுக! அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, வணக்கம். சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டு உள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதி பிள்ளை ஆகியோருடன், மகா தமிழ் பிரபாகரன் பொன்னாவிழி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கிருந்து வலைப்பாடு கிராமத்துக்குச் சென்று, புனித அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, நேற்று (25.12.2013) பகல் 1.30 மணி அளவில், இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர். மூவரையும் கைது செய்த இராணுவத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ தரனையும், பசுபதி பிள்ளை அவர்களையும் மாலையில் விடுவித்தனர்; மகா தமிழ் பிரபாகனை மட்டும் தொடர்ந்து சிறை வைத்து உள்ளனர். செய்தியாளர்கள், உலகம் முழுமையும் பயணிப்பதற்கும், மக்களோடு கலந்து உரையாடுவதற்கும் உரிமை பெற்றவர்கள். ஆனால், இலங்கைத் தீவில், மனித உரிமைகள் நசுக்கப்பட்டு வருவதையும், செய்தியாளர்களுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை; உயிர் ஆபத்தை எதிர்கொண்டு இருக்கின்றார்கள் என்பதையும் உலகம் அறியும். சண்டே டைம்Þ ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கே, அரசுப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்; மேலும் பல செய்தியாளர்களும் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அண்மையில் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அவர்கள், இக்கூற்றை உறுதிப்படுத்தி உள்ளார். எனவே, மகா தமிழ் பிரபாகரனின் உயிருக்கு இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையில் ஊறு நேரக்கூடும் என அஞ்சுகிறேன். தாங்கள் உடனடியா நமது வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் வழியாக நடவடிக்கை மேற்கொண்டு, செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரனை விடுவித்திட ஆவன செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். நன்றி, தங்கள் அன்புள்ள, (வைகோ)

இலங்கை அதிகாரி தகவல் : கைது செய்யப்பட்ட தமிழ் பிரபாகரன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவாரா?

இலங்கையின் விசா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக நிருபர் தமிழ் பிரபாகரனை புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருவதாக அவரை கைது செய்ய உத்தரவிட்ட ராணுவ அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி முடித்த பின் அவர் அந்நாட்டின் குடியமர்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அவர் மேலும் தெரிவித்தார். சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்த மகா. தமிழ் பிரபாகரனிடமிருந்து கைப்பற்றப்பட்ட கேமராவை ஆராய்ந்த போது, அதில் அவர் ராணுவ முகாம்களை மட்டும் குறிப்பாக படம்பிடித்துள்ளது தெரியவந்தது. சுற்றுலா பயணியான அவர் ஏன் ராணுவ முகாம்களை படம் பிடிக்கவேண்டும்? என்று ரோஹன கேள்வி எழுப்பினார். அவர் கைது செய்தப்பட்டது குறித்து இந்திய தூதரகத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பெரும்பாலும் அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக அதிகார்ப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழா: சென்னையில் நேரடி ஒளிபரப்பு

டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் நாளை பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. டெல்லியில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவை சென்னையில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆம்ஆத்மி கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். கோடம்பாக்கம் பிரதாப் பிளாசாவில் உள்ள அரங்கில் பதவி ஏற்பு விழா நேடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கிய ஆய்வுக் கப்பல்

அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருக்கும் ரஷ்ய ஆய்வுக் கப்பல் செவ்வாய்க்கிழமையிலிருந்து அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றை மீட்க சீனாவின் ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. கப்பலில் சிக்கியிருக்கும் குழுவினர் இப்போது கண்ணுக்கெட்டும் தொலைவில் சீனக் கப்பலைப் பார்க்க முடிவதாகத் தெரிகிறது. 'ஸ்னோ ட்ரேகன்' என்ற இந்த சீனக்கப்பல் கடலில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை வெட்டி ரஷ்யக் கப்பல் பயணிக்க உதவ ஒரு பாதையை உருவாக்க முயலுகிறது. இந்த ரஷ்யக் கப்பல் ஒரு ஆஸ்திரேலேஷியா அண்டார்க் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 74 பேர் சிக்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாத் தீவான டாஸ்மேனியாவின் தலைநகர் ஹோபார்ட்டிலிருந்து சுமார் 1,500 கடல் மைல்கள் தெற்கேயிருந்து கடுமையான காற்றால் கொண்டு வரப்பட்ட தடிமனான ஐஸ் கட்டிகளால், ரஷ்ய ஆய்வுக் கப்பலான, 'அக்கெடெமிக் ஷோக்கால்ஸ்க்கி' , சிக்குண்டிருக்கிறது. 'போதிய உணவிருக்கிறது, ஆபத்தில்லை ஆனாலும் , அந்தக் கப்பலில் போதிய உணவு இருப்பதால், குழுவினருக்கு எந்தவித உடனடி ஆபத்தும் இல்லை என்று குழுவின் தலைவர்கள் க்ரிஸ் டர்னி மற்றும் க்ரிஸ் போக்வில் ஆகியோர் கூறினார்கள். பனியால் சிக்குண்டிருக்கும் நிலையிலும், கப்பலில் உள்ள ஆய்வுக்குழுவினர், கடல் வெப்பநிலையைப் பதிவு செய்வது, கடல் நீரில் உப்புத்தன்மையை அளப்பது போன்ற ஆய்வுகளைத் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்குழுவினர், சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடல் வழி ஆய்வாளர் டக்ளஸ் மாசன் பயணித்த அதே வழியில் பயணித்து, இந்த நூறாண்டுகளில் சுற்றுச்சூழலின் பல அம்சங்கள் எந்த அளவுக்கு மாறியிருக்கின்றன என்பதை ஆராய்வதை தங்களின் ஆராய்ச்சி நோக்கங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம் : ஸ்டாலின் திட்டவட்டம்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் , நாகர்க்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘’ திமுக - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலரும் என்று கற்பனை செய்யவேண்டாம்’’ தற்போது உள்ள கட்சிகளுடன் கூட்டனி தொடரும் திட்டவட்டமாக கூறினார். அவர் மேலும், தேமுதிகவுடன் கூட்டணியா என்பது பற்றி கலைஞர் முடிவு செய்வார் என்று தெரிவித்தார்.

ஆசஷ் 4–வது டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 164/9

மெல்போர்ன், டிச. 27– ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் மோதும் ஆசஷ் 4–வது டெஸ்ட் போட்டி நேற்று மெல்போர்ன் நகரில் தொடங்கியது . முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சில் திணறியது. தொடக்க வீரர்கள் கேப்டன் கூக் 27 ரன்னிலும், கார்பெர்ரி 38 ரன்னிலும் அவுட் ஆனார். அதன்பின் ஜோரூட் (24), பெல் (27), ஸ்டோக்ஸ் (14), போர்ஸ்போ (10) ஆட்டமிழந்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 226 ரன் எடுத்து இருந்தது. பீட்டர்சன் 67 ரன்னுடனும், பிரிஸ்னன் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. ஆட்டத்தின் 2–வது ஓவரில் முதல் பந்தில் பிரிஸ்னன் அவுட் ஆனார். அவரது விக்கெட்டை ஜான்சன் கைப்பற்றினார். அதன்பின் ஜான்சன் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகள் சரிந்தன. பீட்டர்சன் (71 ரன்), ஸ்டூவார்ட் பிராட் (11) ஆகய இருவரையும் வெளியேற்றினார். கடைசி விக்கெட்டை (பனேசர்) லயன் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 255 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. ஜான்சன் 5 விக்கெட் கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா அணி விளையாடியது. தொடக்க வீரர் வார்னர் 9 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும், கேப்டன் கிளார்க் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன் இருந்தது. அதன்பின் ரோஜர்ஸ்– ஸ்டீவன் சுமித் நிதானத்துடன் விளையாடியது. சுமித் (19) ரன் ரோஜர்ஸ் (61) பெய்லி (0) ஜான்சன் 3 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி இன்று 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்தது. ஹடின் 43 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருக்கிறார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் தாமதம்

டர்பன், டிச. 27- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் நாள் ஆட்டம் சீக்கிரமே முடித்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முரளி விஜய் 91 ரன்களுடனும், புஜாரா 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டத்திற்கு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். முரளிவிஜய் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலையிலேயே மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேகமூட்டம் இருந்ததால் போதிய வெளிச்சமும் இல்லை. ஏராளமான ரசிகர்கள் குடை பிடித்தபடி காத்திருந்தனர். ஆனால் வானிலை சீராக இல்லாததால் முன்கூட்டியே அதாவது உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. பின்னர் மழை சற்று குறைய ஆரம்பித்து வெளிச்சம் வரத் தொடங்கியது. எனவே, உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முசபர் நகர் நிவாரண முகாம்களில் 34 குழந்தைகள் மரணம்'

செப்டம்பர் மாதம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த, இந்து- முஸ்லிம் கலவரங்களை அடுத்து, தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களுக்காக அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் 34 குழந்தைகளாவது இறந்திருப்பார்கள் என்று அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் இறந்த குழந்தைகளில் பெரும்பாலோனோர் குளிரால் இறந்தார்கள் என்று ஊடகங்கள் கூறுவதை அதிகாரிகள் மறுத்துள்ளனர். குழந்தைகள் நிமோனியாக் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் இறந்தனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். செப்டம்பர் மாதம் நடந்த கலவரத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர். கடந்த பத்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் நடந்த மிகவும் மோசமான கலவரம் இது தான் என்று கருதப்படுகின்றது. இந்தக் கலவரங்களில் சுமார் 50,000 பேர், அதில் பெரும்பாலோனோர் முஸ்லீம்கள், வீடற்றவர்களாயினர். குறைந்தது 85 பேர் காயமடைந்தனர்.நிவாரண முகாம்களில் நிலை ( பழைய படம்) ஒரு இளம் பெண் துன்புறுத்தப்பட்டதை எதிர்த்த 3 ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவம் தூண்டிய இந்த கலவரத்தினால் ஆயிரக்கணக்கானோர் வீட்டை விட்டு வெளியேறினர். இந்த நிவாரண முகாம்களில் 12 வயதிற்கு உட்பட்ட 34 குழந்தைகள் இறந்துள்ளதாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைப் பிரசவத்தில் பிறந்த ஒரு குழந்தையும், நிமோனியாவால் 4 குழந்தைகளும், வயிற்றுப்போக்கால் மற்றும் சில குழந்தைகளும் இறந்துள்ளனர் என்று உத்தரப் பிரதேசத்தின் உயர் அதிகாரி ஏ.கே.குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் இறந்த குழந்தைகளில் பெரும்பாலானோர், முகாமை விட்டு வெளியே சிகிச்சைக்காக அரசாங்க மருத்துமனைகளுக்கோ அல்லது சிகிச்சைக்காக பெற்றோர்களினால் வேறு இடத்திற்கோ கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

சீனத் தலைமையமைச்சரின் சந்திப்பு

2013-12-19
24வது சீன-அமெரிக்க வணிக மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் கூட்டத்தில் கலந்துக் கொள்ள சீனாவுக்கு வந்துள்ள அமெரிக்க வணிக அமைச்சர் பென்னி பிரிட்ஸ்கர், வர்த்தகப் பிரதிநிதி மைக்கேல் ஃபுரோமான், வேளாண் துறை அமைச்சர் தாமஸ் வில்சாக் ஆகியோரை சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 19ஆம் நாள் பிற்பகல் பெய்சிங்கில் சந்தித்துரையாடினார்.

சீன-அமெரிக்கப் போர்க் கப்பல்களின் சந்திப்பு பற்றிய தகவல்

சீன மற்றும் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் தென் சீனக் கடலில் சந்தித்தது குறித்து, சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திப் பணியகம் குறிப்பிடுகையில், சீனப் போர்க் கப்பல் இயக்க விதிமுறைகளுக்கிணங்க செயல்பட்டு, உரிய முறையில் சமாளித்துள்ளது. அத்துடன், இரு நாடுகளின் பாதுகாப்பு துறைகள் இயல்பான வழிமுறைகள் மூலம் தொடர்புடைய தகவல்களை எடுத்துக் கூறி, பயன்தரும் முறையில் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளன என்று இப்பணியகம் தெரிவித்தது.
மேலும், சில செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தொடர்புடைய செய்திகள் உண்மைக்குப் பொருந்தியதாக இல்லை என்றும் இச்செய்திப் பணியகம் தெரிவித்தது.

Thursday, December 26, 2013

ஆப்கானிஸ்தானிலுள்ள ஆஸ்திரேலியப் படைகள் வெளியேறுவது

2013-12-16
ஆப்கானிஸ்தானின் ஒருஸ்கான் மாநிலத்திலுள்ள ஆஸ்திரேலியாவின் இரணுவத் தளம் மூடப்பட்டுள்ளது. அங்கிருந்த அனைத்து படைகளும் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பியுள்ளதாக ஆஸ்திரேலியத் தலைமையமைச்சர் டோனி அபோட்டும், தேசியப் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் ஜான்ஸ்டனும் டிசம்பர் 16ஆம் நாள் நடைபெற்ற செய்திக் கூட்டத்தில் அறிவித்தனர். ஆப்கானிஸ்தானிலுள்ள அனைத்து படைகளையும் ஆஸ்திரேலியா வெளியேற்றியுள்ளதை இது காட்டுகிறது. ஆஸ்திரேலிய அரசின் திட்டப்படி, எதிர்காலத்தில், சுமார் 400 இராணுவத்தினர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலிலும், காந்தகாரிலும் பயிற்சியிலும் ஆதரவுக் கடமைகளிலும் ஈடுபடுவர்.

2013ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசு

2013-10-15
யூஜின் எப். ஃபாமா, லார்ஸ் பீட்டர் ஹான்சன், இராபர்ட் ஜே. ஷில்லர் ஆகிய மூன்று அமெரிக்கப் பொருளியலாளர்கள் 2013ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் பரிசைப் பெறுகின்றனர். அவர்கள் மேற்கொண்ட சொத்து விலைகளின் அனுபவப் பகுப்பாய்வைப் பாராட்டி இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. ஸ்வீடன் அரசு அறிவியல் கழகம் 14ஆம் நாள் இதை அறிவித்தது. இவ்வாண்டுக்கான பொருளியல் நோபல் பரிசுத் தொகை மொத்தம் 12லட்சம் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலிருந்து கறவை மாடுகளை வாங்கும் நேபாளம்

2013-12-18
நேபாள-இந்திய அரசுகளின் செயலாளர் கூட்டம் இந்த வார இறுதியில் நடைபெறும். நேபாளம் இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் சிறந்த இனக் கறவை மாடுகளை வாங்குவது பற்றி இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று நேபாளத்தின் காரோபார் நாளேட்டின் இணையத் தளத்தில் 17ஆம் நாள் செய்தி வெளியாகியது. நேபாளத்தில் நாள்தோறும் 5 இலட்சம் லிட்டர் எடையுள்ள பால் பற்றாக்குறை நிலவுகிறது. நேபாளம் இந்தியாவிடமிருந்து கறவை மாடுகளை வாங்குவது தொடர்பாக உடன்படிக்கை எற்பட்டால், நேபாளத்தில் பால் பொருட்களில் தன்னிறைவு முற்றிலும் நனவாக்கப்படும் என்றும் நேபாளத்தின் வணிக வினியோக அமைச்சின் செயலர் மாட்ஃஹப் பிரசாத் ரெக்மி கூறினார்.

இந்தியாவில் சீனச் செய்தி எனும் பத்திரிகையின் வாசகர்கள் சந்திப்பு விழா

2013-12-20
இந்தியாவுக்கான சீனத் தூதரகம் வெளியிடும் சீனச் செய்தி எனும் பத்திரிகையின் முதல் வாசகர்கள் சந்திப்பை அண்மையில் நடத்தியது. இந்திய அரசு, கட்சிகள், வணிகத் துறை, செய்தி ஊடகம், உயர் நிலை பள்ளிக்கூடம், அரசு சாரா அமைப்புகள் முதலிய பல்வேறு துறைகளின் வாசகர் பிரதிநிதிகள் சுமார் 30 பேர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்த வாசகர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
வாசகர்கள் முன்பு போல எப்போதும் சீனச் செய்தி பத்திரிகையை ஆதரித்து, சீன-இந்திய மக்களுக்கிடையே நட்பு மற்றும் சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும் என்று தூதரகச் செய்தியகத்தின் தலைவர் சியே லி யான் அம்மையார் உரையில் தெரிவித்தார்.

சீனாவின் இயந்திரத் தொழில் நிறுவனங்கள் உலகளவில் பெற்றுள்ள வளர்ச்சி

தற்போது உலகக் கட்டிட இயந்திரத் தொழில் வசதிகளின் சரிபாதி தேவை, சீனாவிலிருந்து வருகிறது. தலைமையகம், சீன ஜியாங் சு மாநிலத்தின் ஷுச்சோவில் அமைந்துள்ள இயந்திரத் தொழில் நிறுவனம், அதாவது ஷு குங் என்பது சுருக்கமாக அழைக்கப்பட்ட குழுமம், 24 ஆண்டுகளாக சீன இயந்திர தொழிலில் முதலிடம் வகித்து வருக்கிறது. தரமுடைய உற்பத்திப் பொருட்களால், அது உலக இயந்திரத் தொழில் துறையில் ஐந்தாவது இடம் வகிக்கிறது. கடந்த ஆண்டில் ஷு குங் குழுமம், 8 ஆயிரம் அகழ்பொறிகளை விற்றுள்ளது. அகழ்பொறி விவகாரப் பிரிவின் பொறுப்பாளர் YuAiJun கூறியதாவது "சீனாவின் உள்நாட்டு அகழ்பொறி சந்தையில் சர்வதேச போட்டி இருக்கிறது. அனைத்து புகழ் பெற்ற உலக இயந்திரத் தொழில் நிறுவனங்களும், சீனாவில் அகழ்பொறிகளைத் தயாரித்து வருகின்றன. அவற்றை விட, குறைந்த விலையில் சிறந்த தரமுடைய உற்பத்திப் பொருட்கள், எமது மேம்பாடு. நடுத்தர மற்றும் உயர் நிலை அகழ்பொறிகள், எமது இலக்கு. இந்த உற்பத்திப் பொருட்கள், கட்டுமானப் பணியின் பல்வகை கோரிக்கைகளை நிறைவு செய்யலாம்."என்று அவர் கூறினார்.

தோஹா சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

உலக வர்த்தக அமைப்பின் 9வது அமைச்சர் நிலை கூட்டம் 7ஆம் நாள் முற்பகல் இந்தோனேசியாவின் பாலி தீவில் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் வெளியான அமைச்சர் அறிக்கையில், பாலி கூட்டு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. 12 ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்த தோஹா சுற்று பேச்சுவார்த்தையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக வர்த்தக அமைப்பின் 9வது அமைச்சர் நிலை கூட்டம் 7ஆம் நாள் முற்பகல் இந்தோனேசியாவின் பாலி தீவில் நிறைவுற்றது.

மாலியில் சீனாவின் அமைதி காப்புப் படை

ஆப்பிரிக்காவின் மாலி நாட்டிலுள்ள கௌவிலிருந்து 400 கிலோமீட்டருக்கு மேலான தொலைவில் அமைந்துள்ள கிதல் நகரின் மாலி வளர்ச்சி வங்கியில் டிசம்பர் 14ஆம் நாள் கடும் தற்கொலை தாக்குதல் நிகழ்ந்தது. வங்கி கட்டிடம் நாசமாயிற்று. காவல் கடமை மேற்கொண்ட செனகல் அமைதி காப்புப் படைவீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 7 பேர் காயமுற்றனர். 15ஆம் நாள் மாலியில் 2வது சுற்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மாலிக்குச் சென்ற சீனாவின் அமைதி காப்புப் படை இதற்காக மிக உயர்வான கறுப்பு எச்சரிக்கை நிலையைத் துவங்கியது.

திபெதின் தொற்று நோய் அவசரத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழு

திபெதின் முதலாவது தேசிய நிலை தொற்றுநோய் அவசரத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் குழு டிசம்பர் 13ஆம் நாள் லாசா நகரில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது. திபெத்தில் பல்வேறு இயற்கை சீற்றங்களுக்கான முன்னெச்சரிக்கை பணிகளையும், பெரிய நடவடிக்கைகளின் சுகாதார உத்தரவாதத்தையும் இக்குழு முக்கியமாகச் சமாளித்து, திபெத் வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசத்தின் பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை மேலும் பேணிக்காக்கும்.

வெளிநாடுகளுக்கு சீனாவின் முன்நிபந்தனையில்லா உதவி

நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக, வெளிநாடுகளுக்கு சீனா அளிக்கும் உதவி, எளிமையான பொருளாதார உதவியிலிருந்து, சமத்துவ கலந்தாய்வு மூலம் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டாக வெற்றி பெறும் திசையை நோக்கி வளர்ந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு உதவியளிக்கும் பணியில், ஆப்பிரிக்காவுக்கு சீனா எப்போதும் முக்கியத்துவம் அளிக்கிறது. இது பற்றி சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆப்பிரிக்க விவகாதத்துக்கான மூன்னாள் சிறப்பு தூதர் லியூ குய்ஜின் அறிமுகம் செய்தார்.
முதலில், வெளிநாடுகளுக்கு சீனா முன்நிபந்தனையின்றி உதவியளிக்கிறது. இரண்டாவதாக, ஆப்பிரிக்காவுக்கு சீனா அளிக்கும் உதவி, வளரும் நாடுகளுக்கிடை ஒத்துழைப்பு ஆகும். வளர்ந்த நாடுகள் ஆப்பிரிக்காவுக்கு அளிக்கும் உதவியிலிருந்து காணக்கூடிய வேறுபாடுகள் இவைதான் என்று அவர் தெரிவித்தார்.

சீன-பாகிஸ்தான் கூட்டாக ஆராந்து உற்பத்தி செய்த 50வது JF-17 தண்டர் போர் விமானம்

சீன விமானச் சேவை தொழிற்துறை கூட்டு நிறுவனமும், பாகிஸ்தான் வானூர்திக் கோட்டமும், கூட்டாக ஆராய்ந்து உற்பத்தி செய்த JF-17 தண்டர் போர் விமானத்தின் வடிவமைப்பு பணிக்கு சீனா பொறுப்பேற்றது. பாகிஸ்தான் கோரிக்கைக்கிணங்க, சில உற்பத்தி தொழில் நுட்பங்களை சீனா பாகிஸ்தானிடம் ஒப்படைத்துள்ளது. இப்படி இருந்தால், இந்த போர் விமானம் பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நவாஸ் ஷேரிப், பாகிஸ்தானில் சீன தூதர் சுன் வெய் துங் உள்ளிட்ட இரு நாட்டு அதிகாரிகளின் பார்வையில், இரு நாட்டு பிரதிநிதிகள், சான்றுகளை பாகிஸ்தான் வான் படை தளபதிகள் குழுவின் தலைவர் தாஹிர் பாட்டிடம் 18ம் நாள், ஒப்படைத்தனர். முதல் தொகுதி JF-17 தண்டர் போர் விமானங்களின் உற்பத்தி பணி முடிவடைந்து, பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டதை இது காட்டுகிறது.

சீன-பாகிஸ்தான் கூட்டாக ஆராந்து உற்பத்தி செய்த 50வது JF-17 தண்டர் போர் விமானம்

50வது JF-17 தண்டர் போர் விமானத்தை படைக்கு ஒப்படைக்கும் விழா, 18ம் நாள், பாகிஸ்தான் வடமேற்கு பகுதியிலுள்ள காம்ரா நகரில் அமைந்துள்ள வானூர்தி கோட்டத்தில் நடைபெற்றது. பாகிஸ்தான் தலைமை அமைச்சர் நவாஸ் ஷெரிப், முதன்மை விருந்தினராக, இவ்விழாவில் கலந்துகொண்டார். 2வது தொகுதி JF-17 தண்டர் போர் விமானங்களின் உற்பத்தி பணி துவங்குவதை அவர் அறிவித்தார். JF-17 தண்டர் போர் விமானத்தை, சீனாவும் பாகிஸ்தானும் கூட்டாக ஆராய்ந்து உற்பத்தி செய்தன. விலை குறைந்த தரம் அதிகமான இந்த போர் விமானத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

பாகிஸ்தான் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்

பாகிஸ்தான் வடமேற்கு பகுதிலுள்ள வட வஷிரிஸ்தான் பிரதேசத்தில் 25ஆம் நாளிரவு அமெரிக்க படை ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இதில், 4 பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர் என்று பாகிஸ்தான் செய்தி ஊடகங்கள் 26ஆம் நாள் அறிவித்தது. இவ்வாண்டு பாகிஸ்தானில் நடத்தப்படும் அமெரிக்க படையின் 26வது ஆளில்ல விமானத் தாக்குதல் இதுவாகும். இத்தாக்குதல்களில் மொத்தம் 166 பாகிஸ்தான் மக்கள் உயிரிழந்தனர்.

சீனாவில் வறுமை ஒழிப்புப் பணி

2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை, சீனக் கிராமப்புறங்களில் வறிய மக்களின் எண்ணிக்கை சுமார் 6கோடியே 70லட்சத்தைக் குறைத்துள்ளது. வறுமை ஒழிப்புப் பணியில் புதிய முன்னேற்றம் காணப்பட்டாலும், இக்கடமை இன்னும் கடினமாகவே உள்ளது. 25ஆம் நாள் சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டிக்கு பணியறிக்கை வழங்கிய போது, சீன அரசவை வறுமை ஒழிப்புப் பணிக்குழு அலுவலகத்தின் இயக்குநர் லியுயூங்பு இதைத் தெரிவித்தார். 2010 முதல் 2012ஆம் ஆண்டு வரை, சீனக் கிராமப்புறங்களில் நிலவிய வறுமை 17.2இருந்து 10.2விழுக்காட்டாக குறைந்தது. முக்கிய வட்டங்களில் விவசாயிகளின் நபர்வாரி நிகர வருமானம் 3273 யுவானிலிருந்து 4602 யுவானாக அதிகரித்தது. இது ஆண்டுக்கு சராசரியாக 18.6விழுக்காடு அதிகமாகும் என்று அவர் விளக்கினார்.

மாசேதுங் 120வது பிறந்த நாள் --சீனாவில் கொண்டாட்டங்கள்

நவீன சீனாவின் நிறுவனரான, மாசேதுங்கின் 120 பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் சீனாவெங்கும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஷி ஜின்பிங் உட்பட சீனாவின் உயர் மட்டத் தலைவர்கள் பீஜிங்கில் உள்ள மாவோ உடல் வைக்கப்பட்டிருக்கும் நினைவகத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினர் என்று அதிகார பூர்வ செய்தி நிறுவனமான ஷின்ஹுவா கூறியது. மாசேதுங்குக்கு சீனர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய மரியாதை என்பது, அவர் மறைவுக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட, பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதுதான் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார பூர்வ நாளேடான சீனா டெய்லி கூறியது. சீன அரசியல்வாதிகள், அவர்களின் அரசியல் அங்கீகாரத்துக்கு மாசேதுங்கைப் பின்பற்றி, பாராட்ட வேண்டியிருக்கும் அதே நேரத்தில், அவரது கொள்கைகள் தற்போது காலாவதியாகிவிட்டன என்பதையும் அவர்கள் உணர்கிறார்கள் ; இந்த இரு நிலைகளையும் அவர்கள் சமநிலைப்படுத்தியே பார்க்கவேண்டியிருக்கிறது என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். சீனாவில் கம்யூனிஸப் புரட்சிக்குப் பின்னர் நடந்த இரு பெரும் துன்பியல் சம்வங்களான, கலாசாரப் புரட்சியும், 'முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்' (The Great Leap Forward) என்ற சமுக பொருளாதாரத் திட்டமும், மாசேதுங்கின் கொள்கைகளால் விளைந்தவை.

போர் வழிபாட்டிடத்துக்கு ஜப்பானிய பிரதமர் விஜயம் - சீனா கோபம்

சர்ச்சைக்குரிய யசுகுனி போர் வழிபாட்டிடம் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அவர்கள், சர்ச்சைக்குரிய யசுகுனி போர் வழிபாட்டிடத்துக்கு விஜயம் செய்தது தொடர்பாக, ஜப்பானிய தூதரை அழைத்து சீனா தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. போர் குற்றவாளிகள் உட்பட போரில் இறந்த ஜப்பானியர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அந்த வழிபாட்டிடத்துக்கு கடந்த 7 வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் விஜயம் செய்த முதலாவது ஜப்பானிய பிரதமர் அபே அவர்கள்தான். தமது கோபத்தை பொறுத்துக்கொள்ள தம்மால் முடியாது இருப்பதாக தென்கொரியா கூறியுள்ளது. இரண்டாம் உலகப் போர் காலத்திலும், அதற்கு முன்னதாகவும், சீனாவும், தென்கொரியாவும் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. ஜப்பானின் நடவடிக்கை பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. கிழக்குச் சீனக் கடலில் உள்ள தீவுகள் தொடர்பில் சீனாவும், ஜப்பானும் முரண்பட்டிருக்கின்றன.

பழிவாங்கும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டால் ஆதரவு வாபஸ்

புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதிகளை 3 மாத காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் கெடு விதித்துள்ளது. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற 3 மாதம் தேவை என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளதை ஏற்று காங்கிரஸ் இந்த அவகாசத்தை அளித்துள்ளது. எந்த வித மானியம் இன்றி மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி குறை கூறியவர்களுக்கு அக்கட்சி ஆதரவு அளிப்பது வேடிக்கையாக உள்ளது பாரதிய ஜனதா கட்சி விமர்சனம் செய்துள்ளது. பாரதிய ஜனதாவை ஆட்சிக்கு வராமல் தடுக்க இரு கட்சிகளும் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்திருப்பதாக பாரதிய ஜனதா கூறியுள்ளது. இதனிடையே ஊழலை ஒழிக்க போவதாக கூறி கொண்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டால் ஆதரவு வாபஸ் பெறப்படும் என காங்கிரஸ் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. முந்தைய காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆட்சிகளில் பணியாற்றிய ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கூறியதை அடுத்து காங்கிரஸ் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூர் பெல் நிறுவனத்தில் இன்ஜினியர், சூபர்வைசர்கள்

பெங்களூர் பெல் நிறுவனத்தில் புராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் சூபர்வைசர்கள் என மொத்தம் காலியாக உள்ள 38 இடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பணி: 1. புராஜெக்ட் இன்ஜினியர்: 15 இடங்கள். இவற்றில் சிவில் பிரிவில் 9 இடங்களும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு, மெக்கானிக்கல் பிரிவில் தலா 3 இடங்களும் உள்ளன. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேசன்/இன்ஸ்ட்ருமென்டேசன்/மெக்கானிக்கல்/சிவில் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60 மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக். 2. சூபர்வைசர்கள்: 23 இடங்கள். இவற்றில் சிவில் பிரிவுக்கு 7 இடங்களும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் ஸ் பிரிவுக்கு 12 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவுக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேசன்/ இன்ஸ்ட்ருமென்டேசன்/மெக்கானிக்கல்/சிவில் ஆகிய பாடங்களில் 60 சதவீத தேர்ச்சியுடன் டிப்ளமோ. ஓராண்டு முன்அனுபவம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். http://www.bheledn.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: The Deputy General Manager (HR), Bharat Heavy Electricals Limited, Electronics Division, P.B.No:2606, Mysore Road, Bangalore-560026. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.12.2013. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 28.12.2013.

இந்திய விமானப்படையில் மகளிருக்கான பொது நுழைவுத்தேர்வு

நமது தேசத்தின் பெருமைக்குரிய இந்திய விமானப் படை அதன் தொழில் நுட்பம், அர்ப்பணிப்புணர்வு, பலம் ஆகியவற்றால் உலகெங்கும் அறியப்படுகிறது. தனி நபர் முன்னேற்றத்துடன் இந்த நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் புனிதமான பணி என்ற பெருமையும் இதில் பணியாற்றுவோருக்கு உள்ளது. இந்தப் படையில் பெண்களுக்கான குறுகிய கால நிலைப் பணி அடிப்படையில் ஜனவரி 2015 முதல் பிளையிங், டெக்னிகல், கிரவுண்ட் டியூடி பிரிவுகளில் உள்ள பதவிகளை நடத்துவதற்கான பொது நுழைவுத் தேர்வு(Air Force Common Admission Test (AFCAT)01/2014)க்கான அறிவிப்பு வந்துள்ளது. ப்ளையிங் பிராஞ் 44 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 19 முதல் 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிளஸ்டூ அளவிலான படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பட்டப் படிப்பை முடித்தவர்களும், பி.டெக்., படிப்பை 60 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். டெக்னிகல் பிராஞ் 58 எஸ்.எஸ்.சி., பிரிவுக்கு 18 முதல் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற போதும், ஏரோனாடிகல் பிரிவில் குறிப்பிட்ட தகுதி உடையவர்கள் மட்டுமே இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்க முடியும். விபரங்களை இணையதளத்தில் காண்க. கிரவுண்ட் டியூடி பிராஞ்ச் 46க்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 27 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். இதில் அட்மினிஸ்ட்ரேஷன் அண்டு லாஜிஸ்டிக்ஸ், அக்கவுண்ட்ஸ், எஜூகேஷன் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளன. இவற்றிக்கு குறைந்த பட்சம் பட்டப் படிப்பும், வேறு சில சிறப்பு தேவைகளும் உள்ளன. விபரங்களை இணையதளத்தில் காணலாம். இந்தப் பதவிகள் பாதுகாப்புப் படை சார்ந்தவை என்பதால் குறைந்த பட்ச உயரம், உயரத்திற்கேற்ற எடை, மார்பளவு, மார்பு விரிவடையும் தன்மை, கண் பார்வை மற்றும் பொது உடல் நலம் போன்ற பல்வேறு உடற் தகுதிகள் தேவைப்படும் என்பதை மனதில் கொள்ளவும். எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை சூலூர், தஞ்சாவூர் ஆகிய மையங்கள். நமக்கு அருகிலுள்ள மா நில மையங்களான பெங்களூரு, மைசூரு, கொச்சி, திருவனந்தபுரம் ஆகியவை. மாதிரி விண்ணப்பம், தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://indianairforce.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க இறுதி நாள் : 12.01.2014

பெரியகுளம் அருகே பச்சிளம் பெண் குழந்தையை வீசிய கொடூரம்

பெரியகுளம், டிச.26– தேனி மாவட்டம் பெரிய குளம் அருகில் வீரஜக்கம்மாள் புரத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பிறந்து 1 மணி நேரமே ஆன பெண் சிசு முள்செடியில் துணிசுற்றப்பட்டு கிடந்தது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண் இயற்கை உபாதையை கழிப்பதற்காக எழுந்துவந்து பார்த்தபோது முள்செடிக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்டது. கடும் குளிரில் தொப்புள் கொடி அகற்றப்படாமல் எறும்புகள் மொய்த்த நிலையில் அந்த குழந்தை கதறி துடித்தது. இதைப் பார்த்ததும் அந்த பெண் குழந்தையை தூக்கி உடனடியாக தென்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்சில் ஒப்படைத்தனர். அங்கு ஆம்புலன்சிலேயே குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிசிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிறந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி கடும் குளிரில் முள்செடியில் வீசிச்சென்ற கொடூர குணம் படைத்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கு வங்காளம்: சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு-சாமியார் கைது

மேற்கு வங்காள மாநிலம் ஷகாபூரில் மடம் நடத்தி வந்த சாமியர் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 4 பேர்களில் 3 சிறுவர்கள். அவர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு தருவதாக சிறுவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ‘இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 377–ன் கீழ் ஓரினச் சேர்க்கை கொள்வது கிரிமினல் குற்றம், இந்தக் குற்றத்துக்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கலாம்’ என்று சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. போலீசார், சாமியார் மீது பிரிவு 377ன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சாமியாரை போலீசார் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்கள் சாமியாரின் மேற்பார்வையில் ஆசிரமத்தில் படித்து வந்துள்ளனர்.

செவ்வாய்ப் பயணத்துக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பம்

செவ்வாய்க் கோளுக்கு சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவதற்கான பயணத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2 இலட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பித்துள்ளனர். செவ்வாய்க் கோளில் நிரந்தரமாகத் தங்குவதற்கான ‘ஒரு வழிப் பயணம்` ஒன்றை ‘மார்ஸ் வண் (Mars One)’ என்ற தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயணத்துக்காக 5 மாதத்தில் 140 நாடுகளில் இருந்து சுமார் 2 இலட்சம் விண்ணப்பங்கள் அந்த தனியார் நிறுவனத்தில் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மொத்த விண்ணப்பத்தில் 24 சதவீதம் அமெரிக்காவில் இருந்தும், 10 சதவீதம் இந்தியாவில் இருந்தும், 6 சதவீதம் சீனாவில் இருந்தும், 5 சதவீதம் பிரேசிலில் இருந்தும், மீதமுள்ள விண்ணப்பங்கள் பிரித்தானியா (4 சதவீதம்), கனடா (4 சதவீதம்), ரஷ்யா (4 சதவீதம்), மெக்சிக்கோ (4 சதவீதம்), பிலிப்பின்ஸ் (2 சதவீதம்), ஸ்பெயின் (2 சதவீதம்), கொலம்பியா (2 சதவீதம்), ஆர்ஜென்ரீனா (2 சதவீதம்), அவுஸ்திரேலியா (2 சதவீதம்), பிரான்ஸ் (1 சதவீதம்), துருக்கி (1 சதவீதம்), சிலி (1 சதவீதம்), உக்ரேன் (1 சதவீதம்), ஜேர்மனி (1 சதவீதம்), பெரு (1 சதவீதம்), போலந்து (1 சதவீதம்), இத்தாலி (1 சதவீதம்) உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன மார்ஸ் வண்’ நிறுவனத்தின் தேர்வுக் குழு தேர்வு செய்யும் தகுதியுடைய நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் 2023ம் ஆண்டு ஒரு குழுவாக செவ்வாய்க் கோளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதற்கு முன்னதாக மனிதர்கள் அங்கு சென்று தங்குவதற்கான வீடுகள் (பார்க்க படம்) 2018ம் ஆண்டிலேயே செவ்வாயில் அமைக்கும் பணிகள் தொடங்கிவிடும். ஒவ்வொரு வீட்டினுள்ளும் சகல வசதிகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.