Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.
Monday, January 6, 2014
இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க: வைகோ
திருச்சி: ஊழலற்ற அரசியலை வென்றெடுக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும். ம.தி.மு.க மாணவர் அணி சார்பில் ‘நாடாளுமன்றத்தில் வைகோ' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. முதல் கட்டமாக மாவட்ட அளவிலும் அதனை தொடர்ந்து மண்டல அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் இறுதி போட்டி நடந்தது. போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் மாநில அளவில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஞாயிறன்று திருச்சி தேவர் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு ம.தி.மு.க மாணவர் அணி மாநில செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் முதல் 4 இடங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் மண்டல அளவில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகள் உரையாற்றி தங்களது பேச்சுத்திறமையை வெளிப்படுத்தினார்கள்.
பொதுக்குழுவில் பொங்கிய தேமுதிக எம்.எல்.ஏக்கள்! திமுகவுடன் கூட்டணி வேண்டாம்.
சென்னை:திமுகவுடன் கூட்டணி வைக்கவே வேண்டாம் என்று தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் பேசியுள்ளனர். அத்துடன் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது பற்றி எவருமே வாயே திறக்கவும் இல்லையாம். லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பாஜக, காங்கிரஸ், திமுக ஆகியவை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் மகிழ்ச்சி.. பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று கோவையில் நேற்று கூட திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
நேற்று தேமுதிக பொதுக்குழு கூடியது. அப்பொதுக்குழுவில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி திமுகவை கடுமையாக சாடிப் பேசினார். அதேபோல் 2 தேமுதிக எம்.எல்.ஏக்களும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே வேண்டாம் என்று விமர்சித்துப் பேசியுள்ளனர். 2016 சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். இதே கருத்தை தேமுதிக நிர்வாகிகள் பலரும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த பொதுக்குழுவில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஹிபொப் கலைஞர்கள் புலிக்கொடி ஏந்தியதனால் சர்ச்சை
அமெரிக்க ஹிபொப் கலைஞர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தி நிகழ்சியொன்றில் பங்கேற்றதனால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் குறித்த ஹிபொப் கலைஞர்கள் புலிக்கொடி ஏந்தி பாடல் பாடியுள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற இரண்டு பிரபல இசைக் கலைஞர்கள் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துள்ளனர். புலிக் கொடியை ஏந்தி பாடல் பாடியதுடன்இ புலிகள் பற்றி மேடையில் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைக்கும் ஆதரவாக கரகோசம் எழுப்புமாறு ஒரு கலைஞர் ரசிகர்களிடம் கோரியதுடன்இ தாமும் புலிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் சுதந்திரப் போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.டெட் பெர்ஸ் என்ற ஹிபொப் கலைஞர்களே இவ்வாறு புலிக் கொடியை ஏந்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் தந்தை தடுத்து வைப்பு –
கிளிநொச்சி, திருநகர் தெற்கைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன் நேற்று திடீரெனத் துடிதுடித்து வீழ்ந்து உயிரிழந்தான். அவனது சாவுக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 9 மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 45 வயதுதுடைய சுப்பிரமணியம் வீரலிங்கம் என்பவரின் மகனான வீ.நிதர்சனின் உடல் பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
உணவருந்தியவுடன் காலை 8.30 மணியளவில் வெளியே புறப்பட்ட சிறுவன் திடீரெனத் துடிதுடித்து வீழ்ந்து மூர்ச்சையாகிப் போனான் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.
தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தனது படிப்பை நிறுத்திவிட்ட நிதர்சன், கூலி வேலைக்குச் சென்றே குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளான். குடும்பத்தின் ஒரே உழைப்பாளியான தந்தை சிறைக்குள் தள்ளப்பட்டதால் தாயையும் மூன்று சகோதரிகளையும் இந்தப் பிஞ்சு வயதிலேயே சுமக்க வேண்டிய பொறுப்பு சிறுவனின் தோள்களில் சுமத்தப்பட்டது.
அவன் தச்சுவேலை செய்தே தனது சகோதரிகளையும் தாயாரையும் கவனித்து வந்துள்ளான். இப்போது அவனையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாது பரிதவித்து நிற்கின்றது அந்தக் குடும்பம். சிறுவனின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான வழிவகை அறியாது தவிக்கும் தாயும் சகோதரிகளும் மகன் இறந்த செய்தியை தந்தைக்கு எப்படித் தெரிவிப்பது என்று அறியாமல் தவிக்கிறார்கள்.
குழந்தைகளை போதிய அக்கறையுடன் வளர்க்காத பெற்றோர்கள் சிலரைக் கடந்த காலங்களில் தண்டித்துள்ள நீதித்துறை, இந்தச் சிறுவனை கல்வி கற்கும் வயதில் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்த இலங்கை அரசையும் அதன் அதிகாரிகளையும் தண்டிக்க முன்வருமா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
வரலாற்றுக் காலம் முதலே இலங்கையில் போலி நாணயக்குற்றி பயன்பாடு காணப்பட்டது
வரலாற்றுக் காலம் முதலே இலங்கையில் போலி நாணயக்குற்றி பயன்பாடு காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே போலி நாணயக்குற்றிகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல அகழ்வாராய்ச்சி நிபுணர் பேராசிரியர் ஒஸ்மன் போபாரச்சி தெரிவித்துள்ளார்.
அனுராதபுர யுகத்திலிருந்தே இவ்வாறு போலி நாணயக் குற்றிகள் மற்றும் நாணயத்தாள்களின் புழக்கம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரோம நாணயக்குற்றிகளுக்கு தட்டுப்பாடு நிலவிய காலத்தில் இந்த, போலி நாணயக்குற்றிகள் தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
பொலனறுவைக் காலப்பகுதிக்கு முன்னதாக பொதுவான இலச்சினைகள் நாணயக்குற்றிகள் பொறிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பொலனறுவைக் காலத்திலேயே முதல் தடவையாக மன்னர்களின் உருவங்கள் நாணயக் குற்றிகளில் பொறிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் - அரசியல் விழிப்புணர்வு மாநாடு மாற்று அரசியல் மலர்ந்திட ... நல்லோரே ஒன்றிணைவீர்
மாற்று அரசியல் மலர்ந்திட ... நல்லோரே ஒன்றிணைவீர் !!!!
திண்டுக்கல் மாநகரில் வரும் சனவரி 26, 2014 குடியரசு தினத்தன்று ...
காந்திய மக்கள் இயக்கத்தின் - அரசியல் விழிப்புணர்வு மாநாடு ......
வளரட்டும் மாற்று அரசியல் .... மலரட்டும் மக்கள் அரசு ......
அனைவரும் வருக ... அனைவரும் வருக ....
தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும்- பழ.நெடுமாறன்!
தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமேஸ்வரத்தில் தெரிவித்தார்.
முல்லிவாய்க்கால் முற்றம் தொடர்பாக 4வது கட்ட நிதிதிரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வரம் விரைவு ரயிலில் புறப்பட்டார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
மீனவர்கள் பிரச்சனை தீரவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் மீனவ மக்களுக்கு துப்பாக்கி வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மீனவர்கள் நலன் பாதுகாக்க மீனவர் பாதுகாப்பு படை ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
உலகிலேயே 5வது இடத்தில் இருக்கும் மிகப்பெரிய இந்திய கடற்படை சிங்களர்களின் கொட்டத்தை அடக்கி தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிவிட்டது. அதோடு தொடர்ந்து தமிழர்களின் விரோதப்போக்க்கையே இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஈழத்தமிழர்கள் கொல்லபட்ட முழு விபரங்கள் தெரியாது இருந்த போதே கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் பலர் தோற்கடிக்கப்பட்டனர். வரவிருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியையும் அதோடு கூட்டணி வைக்கும் மற்ற கட்சிகளையும் மக்கள் முற்றிலுமாக தோற்கடிப்பார்கள் என்று தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு பூங்காவிற்காக நிதிதிரட்டும் பணியில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர்
முள்ளிவாய்க்கால் நினைவு பூங்காவினை தஞ்சையில் அமைப்பதற்கு உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிதி திரட்டும் செயற்பாட்டினை தமிழகத்தில் தொடங்கியுள்ளார்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பூங்கா இடிக்கப்பட்டதை அடுத்து பழ.நெடுமாறன் மீண்டும் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி அதனை அமைப்பதற்காக நேற்றைய தினம் நெடுமாறன் உள்ளிட்ட குழுவினர் தமிழகத்தில் நிதி திரட்டப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மத்திய ரயில் நிலையத்திலேயே நேற்று இந்த ஆரம்ப நடவடிக்கை இடம்பெற்றது.
அதன்படி பயணிகள், பொதுமக்கள் உள்பட பலரும் நிதி வழங்கினார்கள். மேலும் குறித்த நிதி சேகரிப்பானது இன்றும் நடைபெறவுள்ளதாக அறிவுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த உதய்கிரண் தற்கொலை
தெலுங்கு நடிகர் உதய்கிரண் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவருக்கு வயது 36. இவர் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரின் தற்கொலை சம்பவம் தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநாட்டில்தான் பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து அறிவிப்பேன்: விஜயகாந்த் பேச்சு
ஞாயிற்றுக்கிழமை நடந்த தே.மு.தி.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:–
தற்போது, தமிழகத்தில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி நாட்டை இருட்டாக்கிவிட்டுவிட்டு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறிவருகிறது. மக்களை ஏமாற்ற சதி வேலை செய்கிறது. கூட்டணி வியூகம் எப்படி அமைக்க வேறு ‘ரூட்’ வைத்திருக்கிறேன்.
விஜயகாந்த் என்றாலே எப்போதும் கோபப்படுகிறான் என்கிறார்கள். கோபம் வருவது இயற்கைதான். அடிக்கிற கைதான் அணைக்கும் என்று கூறுகிறார்கள். 1991–ம் ஆண்டில் இருந்து 2008–ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டில் 2 கட்சிகளும்தான் மாறிமாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. ஆனால், மின் உற்பத்திக்காக என்ன செய்தார்கள்.
நமது கட்சியில் கூட்டணி குறித்து பேச அரசியல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி பற்றி பேச வருபவர்கள் அவர்களிடம் பேசுங்கள். உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் மாநாட்டையும் நாம் சிறப்பாக நடத்த வேண்டும்.
இவ்வளவு கூட்டமா என்று எல்லோரும் மூக்கின் மேல் விரலை வைக்கவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டில்தான் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் முடிவு குறித்து அறிவிப்பேன்.
என் மனதில் ஒரு ரகசியம் உள்ளது. அதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இன்றைக்கு ஊடகங்கள், தே.மு.தி.க. அந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் கூட்டணி என்று கூறுகின்றன. நாங்கள் தனித்து நின்றால் என்ன செய்வீர்கள். அதனால், பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
பிட்காயின் நாணயம் மீதான தடுப்பு
பிட்காயின் நாணயம் சட்டப்பூர்வ நாணயமாகும் என்பதை மலேசியா ஏற்றுகொள்ளாது என்று மலேசிய தேசிய வங்கி ஜனவரி 4ஆம் நாள் அதன் இணையதளத்தில் அறிவித்தது.
பிட்காயின் நாணய பயன்பாட்டை இந்தியா கடந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தியது. பண மோசடி அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பிட்காயின் நாணயம் பயன்படுத்தப்படக்கூடும் என்று இந்தியா தெரிவித்தது.
அல் கைதாவின் லெபனான் தளபதி மரணம்
தடுத்து வைக்கப்பட்டிருந்த லெபனானிய அல்கைதாவின் முக்கிய தளபதியான மஜீட் அல் மஜீட் அவர்கள் உடல்நிலை மோசமானதன் காரணமாக இறந்துவிட்டதாக லெபனானின் இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரகம் பழுதடைந்திருந்ததாக இன்னுமொரு செய்தி கூறுகிறது.
கடந்த வருடங்களில் மத்திய கிழக்கெங்கிலும் குண்டுத் தாக்குதல்களை நடத்திவந்த அல்கைதாவின் இணை அமைப்பான அப்துல்லா அஸாம் பிரிகேட்ஸ்ஸின் தலைவரான அல் மஜீட் அவர்கள் சவுதி தேசத்தவராவார்.
அண்மையில் பெய்ரூட்டில் இரானிய தூதரகத்தின் மீதான தாக்குதலையும் அதுவே நடத்தியிருந்தது.
கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அல் மஜீட் அவர்கள் ரகசிய இடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இராக்குக்கு உதவுவோம் ஆனால் படைவராது' - ஜோண் கெரி
அல்கைதாவின் ஆதரவுடனான தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிடுவதற்கு இராக் அரசுக்கு தமது உதவி கிடைக்கும் என்று கூறியுள்ள அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜோண் கெரி அவர்கள், ஆனால், அமெரிக்க படைகள் இராக்குக்கு மீண்டும் திரும்பாது என்று கூறியுள்ளார்.
பிரதமர் நூரி அல்மலிக்கியின் இராக்கிய அரசாங்கம் தீவிரவாதிகளை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, ஜெரூசலத்துக்கான தனது பயணம் ஒன்றின் போது கெரி அவர்கள் கூறியுள்ளார்.
மேற்கு நகரான ஃபலுஜாவை இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் மற்றும் லெவெண்ட் (இஸ்இஸ்) என்ற தீவிரவாதக் குழுவிடம் தாம் இழந்துவிட்டதாக இராக்கிய அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவரது இந்தக் கூற்று வந்துள்ளது.
பாக்தாதில் குண்டு வெடிப்புகள்
இதற்கிடையே இராக்கிய தலைநகர் பாக்தாதில் தொடர்ச்சியாக நடந்த குண்டுத்தாக்குதல்களில் குறைந்தபட்சம் 14 பேராவது கொல்லப்பட்டதுடன், மேலும் டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
பெரும்பாலும் சியாக்கள் வாழும் மாவட்டமான சாப்பில் இரு கார் குண்டுகள் வெடித்ததில் 9 பேர் கொல்லப்பட்டனர். வேறு இரு குண்டு வெடிப்புக்களில் ஏனையவர்கள் இறந்திருக்கிறார்கள்
தெற்கு சுடான் மோதலில் இராணுவ ஜெனரல் ஒருவர் பலி
தெற்குசுடானின் ''போர்'' நகருக்கு வெளியே நடந்த கடுமையான சண்டையில் ஒரு இராணுவ ஜெனரல் கொல்லப்பட்டிருக்கிறார்.
அந்த நகருக்கு கூடுதலாக அனுப்பப்பட்ட வாகனத் தொடரணி ஒரு இடத்தில் வழிமறித்து கடுமையாக தாக்கப்பட்டதாக, அங்கு முன்னேறிக்கொண்டிருக்கும் அரசாங்கப் படைகளுடன் இருக்கும் ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை அதிபரான ரெய்க் மச்சார் அவர்களுக்கு ஆதரவான கிளர்ச்சிக்காரர்களின் வசம் Bor நகர் இருக்கிறது.
அந்த வீதி நெடுகிலும், இறந்த சடலங்களையும், எரிந்துபோன யுத்த தாங்கிகளையும் பார்த்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
3 வாரமாகத் தொடரும் சண்டையை முடிவுக்கு கொண்டுவருமுகமாக மோதலில் ஈடுபடும் இரு தரப்பும், எத்தியோப்பிய தலைநகர் அட்டிஸ் அபபாவில் நேரடி பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளன.
வங்கதேசத் தேர்தலில் வன்முறை, 12 பேர் பலி
எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், வங்கதேசத்தில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல்களில் வாக்குப்பதிவு இன்று கடும் வன்முறைகளுக்கிடையே நடந்து வருகிறது.
எதிர்க்கட்சித் தொண்டர்களுக்கும் போலிசாருக்கும் இடையே நடந்த மோதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் பல நாட்களாக நடந்த வன்செயல்களில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல்கள் நடக்கும்போது ஆட்சியில் இருக்கும் அரசு பதவி விலகி, பக்கசார்பற்ற காபந்து அரசு ஒன்றின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படும் வழக்கத்தை , தற்போது ஆளும் அவாமி லீக் அரசு மாற்றியதைக் கண்டித்து, எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியினர் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
'முல்லைத்தீவில் கடற்சீற்றம் மற்றும் கடும் மழை'
முல்லைத்தீவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகிற அதேவேளை கடலும் பேரலைகளுடன் நிலப்பகுதியுள் சிலமீற்றர் தூரம் முன்நகர்ந்துள்ளது.
இத்திடீர் காலநிலை மாற்றம் குறித்து முல்லை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முல்லைக்கரையோரம் உள்ள மக்களிடம் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழக - தமிழீழ மீனவர்களை மோதவிடும் சிங்களம்
அன்று, கடற்புலிகளின் பலத்தில் இருந்த கடற்பாதுகாப்பும்
இன்று, தமிழக - தமிழீழ மீனவர்களை மோதவிடும் சிங்களமும்
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கமான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இன்றும் அதே இந்தியாவைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் ஜனநாயக வழிப் போராட்டங்களையும் நசுக்குவதற்கு முற்பட்டு வருகின்றது. ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்கு மத்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொண்டது போன்று ஜனநாயக வழிப் போராட்டங்களை அடக்குவதற்கு தமிழக அரசாங்கத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளத் துடிக்கின்றது. அதன் ஒரு அங்கமே தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்களின் கைது விவகாரமாகும்.
ஆழ்கடலில் தேடிச் சென்று தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்துகொண்டு வருகின்ற சிறீலங்காப் படையினர், அவர்கள் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு இடைஞசலாக இருந்தார்கள் என்றும் ஈழத் தமிழ் மக்களின் கடற்றொழில் உபகரணங்களைச் சேதப்படுத்தினார்கள் என்று ஈழத் தமிழ் மீனவர்கள் தெரிவித்ததன் அடிப்படையிலேயே கைது செய்வதாகத் தமிழக மீனவர்களுக்கு கூறுகின்றனர். சிறீலங்காவின் நீதிமன்றங்களிலும் இவ்வாறே அறிக்கையிடுகின்றனர். இதனால் தமிழக மீனவர்களும் அவர்களின் குடும்பங்களும் ஈழத் தமிழ் மக்களில் எதிர்ப்புணர்வைக் கையாள்வார்கள் என்றும் சிங்களப் படையினர் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறான எதிர்ப்புணர்வுகளானவை தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு சார்பாக இடம்பெறுகின்ற போராட்டங்களின் வீச்சைக் குறைக்கும் என்று மகிந்த அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
உலகிலுள்ள அனைத்து நாட்டு படைகளுடனும் ஒப்பிடுகையில் கடலில் கொலை செய்வதற்கு சிறந்த படை சிங்களப் படை என்பது தமிழர்கள் அறிந்த வராலாற்று உண்மை. இது தமிழக மக்களுக்கும் நன்கு தெரியும். அதே பாணியிலேயே சிறீலங்கா கடற்படையினர் மகிந்தவின் உத்தரவின் பேரில் இன்று தமிழக மீனவர்களைத் துரத்திப் பிடிக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் வாய் திறக்கக்கூடாது. மீறித் திறந்தால் எமது கடலில் நீங்கள் மீன் பிடிக்க முடியாது என்ற உண்மையை உணர்த்துவதற்காகவே சிங்களப் படையினர் தமிழக மீனவர்களைக் குறி வைத்திருக்கின்றனர்.
சிறீலங்கா- இந்திய மீனவர்களின் பிரச்சினை நேற்று இன்று உருவானதல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் எப்போது ஆரம்பமானதோ அப்போதே இந்த மீனவர் பிரச்சினையும் ஆரம்பமாகிவிட்டது. விடுதலைப் புலிகளின் கடற்புலிகளைத் தேடியழித்தல் என்ற பெயரில் சர்வதேச கடற்பரப்பில் வலம் வந்த சிறீலங்கா கடற்படையினரின் விசைப்படகுகள் தமிழக மீனவர்களில் பல நூற்றுக்கணக்கானோரைக் கொன்று குவித்தன. இந்தக் காலகட்டத்திலேயே தமிழ் மக்களும் கடலில் கொன்று குவிக்கப்பட்டனர்.
சிறீலங்காவின் ஏனைய இடங்களுக்கும் யாழ்ப்பாணத்திற்குமான தரைவழிப்பாதை தடைப்பட்டதால் பல்வேறு தேவைகளுக்காகவும் தென்னிலங்கை செல்கின்ற பொது மக்கள் கடல் மார்க்கமாகவே போக்குவரத்துச் செய்தனர். குறிப்பாக, கிளாலி, கொம்படி கடற்பாதைகளே இதற்கென பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இதன்போது சிறீலங்கா கடற்படையினர் கடலில் ஆடிய வெறியாட்டத்தில் எமது பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கடலுக்கு இரையாகினர். அவ்வப்போது கரை திரும்புகின்ற கப்பல்கள் இரத்த வெள்ளத்தில் பிணங்களைச் சுமந்து வந்தன. இதனால் எமது தாயகமே அடிக்கடி சோகமயமானது. இந்தக் காலகட்டத்திலேயே தீவகக் கடற்பரப்பில் குமுதினிப் படுகொலையும் இடம்பெற்றது. நெடுந்தீவுக்கும் குறிகாட்டுவானுக்கும் இடையே சேவையில் ஈடுபட்ட குமுதினிப் படகில் பயணித்த மக்கள் சிறீலங்காக் கடற்படையினரால் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்தப் படுகொலைகளை விட கடற்தொழிலுக்குச் சென்ற தமிழர் தாயகத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களும் கடலில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். சிறீலங்கா அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் மீனவர்கள் மிகுந்த கஸ்டப்பட்டு ஆயிரம் ரூபாவுக்கு ஒரு போத்தல் மண்ணெண்ணெய் வாங்கி தமது இயந்திரங்களை இயக்கிக்கொண்டு கடலுக்குச் சென்ற போதும் மறுநாள் பிணமாக வீட்டுக்கு திரும்புவார்கள். இதனை எந்த மனைவிமாரால் ஏற்றுக்கொள்ள முடியும். எந்த பிள்ளைகளால் இந்த துயரங்களைத் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், எமது தமிழ்க் கடல்தொழிலாளியின் மனைவிமார் இந்தத் துயரங்களைத் தாங்கினார்கள். எமது தமிழ்ப் பிள்ளைகள் இந்த வேதனைகளைச் சுமந்தனர். ஒரு நாள் இரு நாள் அல்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் இவ்வாறு வேதனைகள் தொடர்ந்தன.
இத்தனை அவலங்களையும் தமிழர்கள் தாங்கியபோது எவருமே திரும்பிப் பார்க்கவில்லை. இந்த வேதனைகளைத் தொடரவிடக்கூடாது என்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் எடுத்த முடிவால் தான் கடற்புலிகள் என்ற அணி உருவாக்கப்பட்டது. தமிழ் மக்களின் கிளாலி மற்றும் கொம்படி ஊடான போக்குவரத்தின் போதும் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளின் போதும் கடற்புலிகள் பாதுகாப்பு வழங்கினர். இதனால் சிங்களக் கடற்படை தமிழ் மக்களின் கடற்பரப்பில் கால்பதிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மீறி தமிழ் மக்களின் கடற்பரப்புக்கு வந்த கடற்படையினரின் டோறாக்களும் விசைப்படகுகளும் அடிக்கடி கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் நிர்மூலமாக்கப்பட்டன.
உலகமே வியக்கும் வகையில் கடலில் சாதனைகளை நிகழ்திய கடற்புலிகள் தமிழ் மக்களின் தேசிய இராணுவத்தில் என்றுமே பிரிக்கப்பட முடியாத அங்கமாக வளர்ந்தது. தமிழீழ தேசியத் தலைவரை உலகில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக நிலைநிறுத்திக் காட்டுவதற்கு கடற்புலிகளின் வளர்ச்சியும் கடற்கரும்புலிகளின் வளர்ச்சியும் முக்கிய காரணமாக அமைந்தன. இன்றுவரை தமிழ் மக்களின் வீரம் உலகில் பேசப்படுகின்றது என்றால் அதற்கு காரணம் கடற்புலிகள் கடலில் நிகழ்த்தி வீர சாதனைகள் தான். குறிப்பாக சொல்லப்போனால், சோழர்களின் ஆட்சிக்கு பின்னர் உலகில் தமிழர்களின் ஆட்சி மலர்ந்தது என்றால் அது பிரபாகரன் தலைமையிலான ஆட்சிதான். சோழர்களுக்கு பின்னர் கடலில் புலிக்கொடியுடன் வலம் வந்த கப்பல்கள் என்றால் அது கடற்புலிகளின் கப்பல்கள்தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
புலிகள் பலமாக இருந்த போது பெட்டிப் பாம்பாக அடங்கியிருந்த சிறீலங்காக் கடற்படையினர் இன்று தமிழ் மக்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்களையும் அடக்குவதற்காக இந்திய மீனவர்களைப் பிடிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கட்டுரையாளராகிய நான் இன்று தாயகத்திலேயே வசிக்கின்றேன். இங்குள்ள மீனவர்களுடன் உரையாடினால் மட்டுமே உண்மை புரியும். அதுவும் சிலர் மட்டுமே உண்மையை உரைக்கத் தயாராக இருக்கின்றனர். குறிப்பாக இந்திய மீனவர்கள் என்ற பெயரில் திட்டமிட்டு கடலில் இறக்கப்படுகின்ற சிங்கள மீனவர்கள் எமது வலைகளை அறுத்தெறிகின்றனர். எமது வலைகளை நாங்கள் கரையில் படுத்திருந்தாலும் அங்கு வரை வந்து வலைகளை வெட்டிவிட்டுச் செல்கின்றனர். ஆனால் பழி தமிழக மீனவர்கள் பக்கம் செல்கின்றது என்று எமது தாயகத்திலுள் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
எமது மீனவர்கள் கூறுவது போன்று தாயகத்திலுள்ள மீனவர்கள் யுத்தத்தால் கடும் பாதிப்பை எதிர்நோக்கியவர்கள் என்பது தமிழக மீனவர்களுக்கு தெரியும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களில் அங்கே இந்தியாவில் தமிழக மீனவர்களே முன்னின்று குரல்கொடுக்கின்றனர். எங்களில் அக்கறையாக இருக்கின்ற அவர்கள் எமது வலைகளை அறுத்து எறிவார்கள் என்று நாங்கள் கனவுகூடக் காணவில்லை. ஆனால், அவர்களுக்கும் எங்களுக்கும் இடையே முறுகலை ஏற்படுத்திவிட்டு தாங்கள் அரசியல் குளிர் காய்வதற்கு சிங்கள அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று யாழ்.குடாநாட்டு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் கூற்றுக்கு வலுச் சேர்ப்பது போன்று கடந்த 29 ஆம் திகதி பிடிபட்ட மீனவர்கள் தாங்கள் தமது கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது விசைப்படகில் வந்த சிறீலங்கா கடற்படையினர் தங்களைத் துரத்திப் பிடித்தனர் என்று கருத்து தெரிவித்திருக்கின்றனர். கடந்த 29 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்துப் பிடிக்கப்பட்டதாக தெரிவித்து 22 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் மகேந்திரராஜா முன்னிலையில் முன்நிறுத்தியபோது அவர்களை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருக்கின்றார். இதில் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் இந்த மீனவர்களில் ஒருவர் ஏற்கனவே சிறீலங்கா கடற்படையால் பிடிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறிலங்காவில் சிறைவைக்கப்பட்டிருந்து அண்மையில் தான் விடுவிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே பிடிபட்ட மீனவர்கள் திரும்பத் திரும்ப சிறீலங்காக் கடற்பரப்பிற்குள் வரமாட்டார்கள். ஆனால், தாங்கள் தமது கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது விசைப்படகில் வந்த சிறீலங்கா கடற்படையினர் தங்களைத் துரத்திப் பிடித்தனர் என்று கூறுகின்றனர். இதுதான் உண்மையானது. ஈழத் தமிழ் மக்களுக்கு இந்தியாவின் தமிழகத்தில் இருக்கின் செல்வாக்கைக் குறைப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் இவ்வாறான விடயங்களை மேற்கொண்டு வருகின்றது.
எனவே, ஈழத் தமிழ் மக்கள் சரி, இந்தியாவின் தமிழ்நாட்டுத் தமிழ் மக்கள் சரி, இந்த விடயங்களில் எந்தவித குழப்பங்களும் அடையக்கூடாது. மகிந்த அரசாங்கத்தின் சூழ்ச்சிகளுக்கு எடுபடக்கூடாது. இது குறித்து உண்மைத் தன்மையை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு தமிழக மீனவர்களும் ஈழத் தமிழ் மீனவர்களும் முயற்சியெடுக்க வேண்டும். எமது விடுதலை நோக்கிய பயணத்தில் நாங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ தடைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். அவற்றில் எதற்கும் அடிபணியாமல் எமது விடுதலையை விரைவுபடுத்துவதற்கு தமிழக மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைக்க வேண்டும். ஈழத் தமிழ் மக்களுக்கான சுதந்திரம் கிடைக்குமாயின் அது தமிழக மக்களின் ஆசியுடன்தான் கிடைக்கும். இந்த விடயத்தில் ஈழத் தமிழ் மக்களும் தமிழக மக்களும் குழப்படையக்கூடாது என்பது இங்கு சுட்டிக்காட்டப்படுகின்றது.
-தாயகத்தில் இருந்து வீரமணி
Subscribe to:
Posts (Atom)













