Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, December 30, 2013

மன்னார் புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அதனைத் தோண்டும் நடவடிக்கை நேற்று இரண்டாவது தடவையாகவும் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் மூன்றாம் ஆம் திகதி வரையில் புதை குழியைத் தோண்டும் பணி இடம் பெறமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் திகதி குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அன்று முதல் மன்னார் நீதிவான் மற்றும் மன்னார் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் குறித்த இடத்தைத் தோண்டும் பணிகள் கடந்த 22 ஆம் திகதி வரை நடைபெற்றன. அங்கு 11 மனிதச் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து கொழும்பிலிருந்து விசேட நிபுணர் குழுவினர் வருகை தந்து, அவர்கள் முன்னிலையில் குறித்த மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்காக டிசெம்பர் 28ஆம் திகதி வரை அகழும் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தது. பின்னர் கொழும்பிலிருந்து வந்த விசேட நிபுணர் குழுவினர் முன்னிலையில் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் நேற்று முன்தினம் மீண்டும் ஆரம்பமாகின. மன்னார் நீதிவான், கொழும்பிலிருந்து சென்ற விசேட நிபுணர் குழுவினர், மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் நிலையைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையில் இந்த மனிதப் புதைகுழி நேற்றுமுன் தினம் தோண்டப்பட்டபோது ஏற்கனவே மீட்கப்பட்ட 11 மனித எச்சங்களின் முழுமையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. அத்துடன் மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மீண்டும் குறித்த புதைகுழி தோண்டும் நடவடிக்கை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நேற்று திடீரென்று தோண்டும் பணி இரண்டாவது தடவையாக நிறுத்தப்பட்டது. புதுவருடத்துக்காகவே புதைகுழியைத் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டன என்றும், எதிர்வரும் 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து குறித்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றன. இதேவேளை, அங்கு தோண்டத் தோண்ட மனித எச்சங்கள் காணப்படுவதால் அது மாபெரும் மனிதப் புதைகுழி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும், குறித்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் இந்தப் புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள விசேட நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்களை முன்வைக்க ஏற்பாடு? -அ.நிக்ஸன்-

சர்வதேச அழுத்தம் என்பது அரசாங்கத்துக்கு அவ்வப்போது சிறிய அச்சத்தை ஏற்படுத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான கருவியாக அமைந்து விடுகின்றன. சிங்கள பௌத்த தேசியவாத வளர்ச்சிக்கும் வலுச்சேர்க்கின்றன. அதன் காரணமாக சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைச் சபையின் பொறுப்பை பௌத்த தேரர்கள் எற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைககள் தீவிரமடைந்து வருகின்றன. வெளியுறவு அமைச்சுக்கும் மனித உரிமைகள் அமைச்சுக்கும் ஜனாதிபதி கடும் உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றார். விசேட அதிகாரிகள் குழு ஒன்றை அமைப்பது, வடக்கு கிழக்கில் இருக்கும் பொது நிலையினர், கல்விமான்கள் அடங்கிய குழு மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அமைப்பது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இம்முறை ஜெனிவாவுக்கு செல்லும் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் போருக்கு பிந்திய செயற்பாடுகளை ஆதரங்களுடன் நிரூபிக்கும் வகையில் பேச வேண்டும் என்ற உத்தரவு ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. கொழும்பிலும் சந்திப்புகள்:- மார்ச் மாதத்திற்கு முன்னர் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து போருக்கு பிந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் மனித உhமைகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிப்பதற்கு வெளியுறவு அமைச்சு தீர்மானித்துள்ளது என்றும் அதற்காக சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்றை அமைச்சர் பேராசியர் பீரிஸ் நியமித்துள்ளார் என்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக இந்த செயற்திட்டம் நடைபெறுவதாகவும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர். 2014 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என அரசாங்கம் கூறியுள்ளது. இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் உறுப்பு நாடுகள் முன்வைக்கவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்கும் எனவும் அது இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அரசாங்கத்தின் உயர்மட்டம் கருகின்றது. அந்த பாதிப்புகள் பொருளாதார ரீதியில் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் தங்கள் பக்க நியப்பாடுகளை முடிந்தவரை எடுத்துரைக்க அரசாங்கம் திவீரமாக ஈடுபடவுள்ளது என்ற தகவல் வெளியில் கசிந்துள்ளன. ஆணைக்குழு அறிக்கை புடிப்பினைகள் மீளிணக்க ஆணைக்குழவின் அறிக்கையில் உள்ள முக்கியமான நான்கு சிபாரிசுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தன. கடந்த வருடம் ஜெனீவா தீர்மானத்திலும் கூறப்பட்டிருந்தது. ஆனால் உரிய முறையில் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணு எண்ணிக்கைகளை குறைப்பது. சிவிலி நடவடிக்கைகளில் இராணுவ தலையீடுகளை நீக்குவது போன்ற விடயங்கள் அரசாங்கத்தினால் செய்யப்படவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, முன்னாள் போராளிகளின் விடுதலை, விடுதலை செய்யப்பட்ட போராளிகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களிலும் பலவீனமான செயற்பாடுகள் காணப்படுகின்றன. குறித்த இந்த விடயங்களில் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரசாங்கம் ஒப்பாசாரத்தக்கேனும் சில விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன. நிரந்தர அரசியல் தீர்வு குறித்த விடயங்களிலும் முன்னேற்றம் இல்லை என்ற காரணத்தினால் தென் ஆபிரிக்க மத்தியஸத்தம் பற்றிய பேச்சுக்கள் அடிப்பட்டன. அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா அந்த முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டதால் அந்த முயற்சியும் கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரை எதிர்கொள்ளவுள்ள அரசாங்கம் மேற்படி அணுகுமுறைகள் மூலம் குறைந்த பட்சமான சாதகமான நிலைமையை தோற்றுவிக்க முற்படுகின்றது. ஆனாலும் அது காலம் கடந்துவிட்ட அணுகுமுறை என்றுதான் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் கூறுகின்றனர். ஆயர்கள் அழைக்கப்படலாம்:- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் அரசாங்கங்களின் பிரதிநிதிகள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும். வேறு அரசியல் கட்சிகள் அல்லது வேறு பிரதிநிதிகள் யாரும் அதிகாரபூர்மாக பங்குபற்ற முடியாது. ஆனால் கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில்; மண்டபத்துக்கு வெளியே அரசசார்பற்ற நிறுவனங்களின் விளக்கமளிக்கும் சிறிய கூட்டங்கள், செயற்பாட்டு திட்டங்கள், ஆலோசணைக் கூட்டங்கள் நடைபெறும். அவ்வாறான கலந்துரையாடல்களுக்கு இம்முறை வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபையினால் சிலர் அழைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் அவ்வாறு அழைக்கப்படுபவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் எழுகின்றமையினால் அந்த முயற்சியை மனித உரிமைச் சபை கைவிடக்கூடிய நிலையும் உண்டு. எனினும் ஆயர்களை அழைப்பதற்கான ஏற்பாடுகளும் இருப்பதாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலக வட்டாரங்கள்; குறிப்பிட்டன. மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்தும் நேரடியாகவும் பக்கச்சார்பு அற்ற முறையிலும் அறிந்து கொள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை முயற்சிக்கின்றார் என்பதுதான் உள்ளக தகவல்கள். அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதிகள் இந்த வாரம் கொழும்புக்கு வரவுள்ளமைக்கான காரணங்களும் அதுதான். அரசாங்கத்தக்கு சாதாகம்:- மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைச் சபையின் கூட்டத்தில் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள்; முக்கியம் பெறவுள்ளன. ஒன்று அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை. இரண்டாவது ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் நிபந்தனைகள், தீர்மானங்கள். ஆனால் அவற்றை அரசாங்கம் எவ்வாறு ஏற்கும் என்பதும் அந்த இரண்டு விடயங்களும் அனைத்து நாடுகளினாலும் முழுமையாக ஏற்கப்படுமா என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் இம்முறை சினா மனித உரிமைச் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ளமை இலங்கைக்கு சாதகமான விடயம். ஆகவே அடுத்த ஆண்டு இலங்கை அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைச் சபையும் அமெரிக்காவும் இன்னும் கூடுதல் வேலைத்திட்டங்களில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் உலக அரசியல் ஒழுங்கு அதற்கு இடமளிக்குமா என்பது மற்றுமொரு கேள்வி. இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தாலும் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க அனுமதிக்கமாட்டர்கள் என்பது கண்கூடு. ஏனெனில் அது இந்திய வெளியுறவுக் கொள்கையுடன் சம்மந்தப்பட்டது. எனவே ஜியோ பொலிற்றிக்ஸ் எனப்படும் பிராந்திய அரசியல் நலனில் இருந்து விடுபட்டு இலங்கையில் சகல சமூகங்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகம் சிந்தித்தால் மாத்திரமே இலங்கை அரசாங்கத்தின் போக்கில் மாற்றத்தை எற்படுத்த முடியும்? இல்லையேல் சர்வதேச அழுத்தங்கள் என்பது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு சிறிய அச்சங்களை அவ்வப்போது ஏற்படுத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான கருவியாக அது அமைந்து விடுகின்றது. சிங்கள பௌத்த தேசியவாத வளர்ச்சிக்கும் வலுச் சேர்க்கின்றன. அதன் காரணமாகவே சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைச் சபையின் பொறுப்பை பௌத்த தேரர்கள் எற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினா் ராதிகா யாழ்ப்பாணத்தில்

கனேடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். .எதிர்வரும் 4ம் திகதி வரை இலங்கையினில் தங்கி நிற்கும் அவர் யுத்த பாதிப்பிற்குள்ளான பகுதிகளையும் நேரினில் பார்வையிட ஆர்வம் கொண்டுள்ளார். இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள அவர் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயமுள்ளிட்ட பல பகுதிகளையும் நேரினில் சென்று பார்வையிட்டார். குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு பிரதேசம் மற்றும் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களை கூட்டமைப்பு சார்பு வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் சோ.சுகிர்தன் நேரினில் அழைத்து சென்று காண்பித்தார்.நாளை முல்லைதீவிற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே ராதிகா சிற்சபேசனது யாழ் பயணம் தொடர்பாக செய்தி சேகரிக்க முடியாத அளவிற்கு இராணுவப்புலனாய்வு பிரிவினர் ஈக்கள் போல மொய்த்து திரிவதாக தெரிவிக்கும் உள்ளுர் ஊடகவியலாளர்கள் அதே வேளை அவரையும் சிக்க வைக்க ஊடகங்களினில் புகைப்படங்களுடன் செய்திகளை அறிக்கையிட கோரிவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினா் ராதிகா யாழ்ப்பாணத்தில்:- செய்தி திருத்தம் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிட்சபேசன் நேற்று முன்தினம் (28.13.12) இலங்கை சென்று இன்று யாழ்ப்பாணத்தில் சந்திப்புக்களை மேற்கொள்கின்றார். யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ள இவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்; மற்றும் வட மாகண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தொடர்ந்து பல பொது அமைப்புக்களையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்களின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் இடம்பெயர்ந்து மக்கள் வாழும் சபாபதிப்பிள்ளை அகதி முகாமிற்கும் சென்று மக்களுடன் உரையாடியுள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இந்த முகாமிற்கு சென்று மக்களைச் சந்தித்து பெரும் சர்ச்சைகளை உருவாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காதான் உலக அமைதிக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல்'

உலக அமைதிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அமெரிக்காதான் என்று உலக மக்களில் கால் பங்கினர் கருதுவதாக சர்வதேச ஆய்வு ஒன்று கணிக்கிறது. வின்/கேலப் இண்டர்னேஷனல் அமைப்பால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு , 65 நாடுகளில் சுமார் 67,000 பேரிடம் கருத்துக்களைக் கேட்டறிந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலோனோர் மத்தியில், மக்கள் இடம் பெயர்ந்து குடியேறத் தகுதியான நாடு அமெரிக்காதான் என்ற கருத்தும் இருப்பதாக, இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த ஆய்வில் பங்கெடுத்துக்கொண்டோரில் ஏறக்குறைய பாதிப்பேர் , வரும் ஆண்டு, முடியப்போகும் 2013ஐ விட சற்று மேலும் நன்றாக இருக்கும் என்று நம்புவதாகக் கூறினர். உலகில் அரசியல்வாதிகள் பெரும்பாலோர் பெண்களாக இருந்தால், உலகம் இன்னும் மேம்பட்டதாக இருக்கும் என்று மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டோர் கருதினர்.

கிட்டத்தட்ட 70 ஊடகவியலாளர்களாவது கொல்லப்பட்டுள்ளதாக!

சிரியாவில் தொடரும் மோதல்களும், இராக்கில் அதிகரித்து வரும் மதக்குழுக்களிடையேயான தாக்குதல்களும், மத்திய கிழக்குப் பகுதியை, பத்திரிக்கையாளர்களின் "கொலைக்களமாக" மாற்றி வருவதாக ஒரு முன்னணி ஊடக சுதந்திரக் குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, கடமையில் ஈடுபட்டிருந்தபோது கிட்டத்தட்ட 70 ஊடகவியலாளர்களாவது கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மத்திய கிழக்கில் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஊடகவியலாளர் பாதுகாப்புக்காக செயல்படும் குழு (Committee to Protect Journalists) என்ற இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் இந்த வருடம் குறைந்தது, 29 செய்தியாளர்களாவது கொல்லப்பட்டுள்ள நிலையில், சிரியாவில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு என்பது மிகவும் மோசமாகவே இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் போரில் ஈடுபடாத சிவிலியன்கள்தான் என்ற நிலையை மதிக்குமாறு இந்தக் குழு, அரசாங்கம் மற்றும் ஆயுத குழுக்களைக் கோரியிருக்கிறது. மேலும் பத்திரிக்கையாளர்களைத் தாக்கிக் கொல்பவர்களை நீதியின்முன் கொண்டுவர உதவுமாறும் அது கோரியுள்ளது.

ரஷ்ய நகரில் மீண்டும் குண்டுத் தாக்குதல்,குறைந்தது 12 பேர் பலிர் பலி

குண்டுத்தாக்குதலில் அழிந்த ட்ராலிபஸ் ரஷ்ய நகரான வொல்கோக்ராடில் மின்சார பஸ் ஒன்றின் மீது நடந்த குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ட்ராலிபஸ் என்றழைக்கப்படும் இந்த மின்சார பஸ் ஒரு ஜனசந்தடிமிக்க பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்ற போது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில், இந்த பஸ் ஏறக்குறைய முழுதுமாக அழிந்தது. நேற்றுதான் இந்த நகரின் மத்திய ரயில் நிலையத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
குண்டுத்தாக்குதல் நடந்த இடம் இந்த ட்ராலிபஸ் வெடிகுண்டுத் தாக்குதலை, ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று ரஷ்ய அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். விசாரணை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் கருங்கடல் பகுதி வாசத்தல நகரான சோச்சியில் மழைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தாக்குதல்கள் இரண்டுமே, பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகப்படுத்தியுள்ளன. இந்த மழைக்கால ஒலிம்பிக்ஸ் நடக்கும் இடம் ரஷ்யாவின் கொந்தளிப்பான, வட காகசஸ் பகுதியில் அமைந்திருக்கிறது.

''மக்கள் பாதுகாப்பு கழகம்'' - தமிழ்நாட்டில் புதுக்கட்சி உதயம்

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’தமிழ்நாட்டில் பெருகி வரும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய அரசியல் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்சிக்கு ‘’மக்கள் பாதுகாப்பு கழகம்’’ என்று பெயர் சூட்டி தொடங்கப்பட உள்ளது. இந்த கட்சியின் தலைவராக தேசிய அம்பேத்கார் வக்கீல்கள் சங்க பொதுச் செயலாளர் பெருமாள் பதவி ஏற்பார். மேலும் இந்த கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 40 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதில் தென் சென்னை தொகுதியில் புதிய கட்சியின் அவைத்தலைவராக இருக்கும் நான் போட்டியிட உள்ளேன். புதிய அரசியல் கட்சியான மக்கள் பாதுகாப்பு கழகம் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக அமையும். தற் போதுள்ள அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் கட்சி களின் முக்கிய நோக்கமாகும். இது நடைமுறையில் சாத்தியமா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். மக்களிடம் இந்த 2 கட்சிகளின் நல்ல எண்ணம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த சில ஆண்டு களுக்குள் எங்கள் நோக்கம் நிச்சயம் நிறைவேறும்’’என்று தெரிவித்தார்.

முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும்: பழ.நெடுமாறன்

தஞ்சை விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் நீரின்றி அமையாது நில வளம் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ் வார், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா தொடர்பாக விளார் ஊராட்சி மன்ற தலைவர் அளித்த நோட்டீசை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது. முன் அறிப்பு இன்றி நோட்டீஸ் அனுப்புவது சட்டத்திற்கு புறம்பானது என உயர் நீதி மன்றம் அறிவித் துள்ளது. முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை விளார் ஊராட்சி மன்ற தலைவர் பார்வையிட விரும்பினால் பார்க்கலாம். அதில் திருப்தி இல்லை என்றால் சட்டப்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அதிலும் எங்கள் பதிலை கேட்டு திருப்தி இல்லை என்றால் வேறு நடவடிக்கை எடுக்கலாம். முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் சட்டத்தை மீறி கட்டிடம் கட்டப்படவில்லை. சட்டப்படிதான் கட்டி உள்ளோம். எங்களது சொந்த இடத்தில் தான் கட்டி உள்ளோம். இது தொடர்பான வழக்கு எங்களுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். முள்ளி வாய்க்கால் எதிரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அரசுஅனுமதி பெற்று தான் பூங்கா அமைத்துள் ளோம். அதனை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என்று அரசு கூறி வருகிறது.இது தொடர்பான வழக்கு வருகிற 2–ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறோம். முற்றம் காப்போம் ரெயில் பயண நிகழ்ச்சி ஜனவரி 4, 5 –ந் தேதிகளில் நடக்கிறது. 4–ந் தேதி சென்னையில் இருந்து சேலம் வரையிலும், 5–ந் தேதி ராமேஸ்வரம், காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை வழியாக சென்னைக்கும் ரெயில் பயணம் நடைபெறுகிறது’’என்று கூறினார்.

டி.ராஜேந்தர் விலகினாலும் தொடர்ந்து செயல்படும் லட்சிய திமுக :நெல்லையில் மாநில மாநாடு!

லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் திடீரென கட்சிப் பொறுப்பிலிருந்து விலகி கலைஞர் முன்னி லையில் தன்னை தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டார். இதனால் லட்சிய திமுக கட்சி கலைக்கப் பட்டதா என்கிற கேள்வி எழுந்தது. ஆனால் டி.ராஜேந்தர் கட்சியை விட்டு விலகினாலும் லட்சிய திமுக தொடர்ந்து செயல்படும் என்று அக்கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளரும், மாநில கொள்கை பரப்பு செயலாளருமான ரோலக்ஸ் பாலன் தெரிவித்துள்ளார். அவர், ‘’டி.ராஜேந்தர் ஏழு ஆண்டுகளாக கட்சி நடத்தினாலும் இதுவரை கட்சிக்காக எதையும்செய்யவில்லை. அவர், தி.மு.க.வில் இணைந்தது கூட, ஏதோ பிரச்னையால் எடுத்துள்ள முடிவுதான். கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் வரும் ஜன.,5ம் தேதி ஈரோட்டில் நடக்கிறது என்றும் இதில் ராஜேந்தரின் தம்பியும் அமைப்பு செயலாளருமான டி.வாசு,மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர் என்றும் கூறினார்.தொடர்ந்து வரும் பிப்ரவரி 23ல் நெல்லையில் மாநில மாநாட்டை நடத்துகிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

19 தொகுதி வேண்டும் : தி.மு.க.,விடம் கேட்கிறது தே.மு.தி.க.,

லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு இரண்டாவது பெரிய கட்சி அந்தஸ்து வழங்கி, ஏழு தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் பேச்சுவார்த்தையை, திரைமறைவில் தி.மு.க., மேலிடம் துவக்கியதற்கு, தே.மு.தி.க., தரப்பு இன்னும் பிடி கொடுக்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால், தங்களுக்கு, 19 லோக்சபா தொகுதிகளை தர வேண்டும் என, தே.மு.தி.க., பேரம் பேசுவதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

நரேந்திர மோடியோ, கெஜ்ரிவாலோ ராகுலுக்கு சமமாக மாட்டார்கள்: லாலு பிரசாத் யாதவ்

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக, பிகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று முசாபர்நகர் சென்றார். அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அவல நிலைகள் குறித்து தொலைக்காட்சிகளில் பார்த்தேன். இந்த மக்களின் நலனுக்காக தொடக்கத்திலே நடவடிக்கைகள் எடுத்திருந்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. இந்த மக்களின் கண்ணீரை துடைக்கவே நாங்கள் எல்லாரும் இங்கு வந்துள்ளோம். அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த வீடு திரும்ப மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி வைக்கும். ராகுல் காந்தி, ராகுல் காந்தி தான். அவருக்கு முன்னால் நரேந்திர மோடியோ, கெஜ்ரிவாலோ நிற்க முடியாது. மக்களாகிய நீங்கள் தான் அவர்களை (மோடி, கெஜ்ரிவால்) கொண்டாடுகிறீர்கள். ஆனால் அவர்கள் உங்களுக்காக இதுவரை என்ன செய்தனர்? இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார். தீவன ஊழல்: கால்நடை தீவன ஊழல் வழக்கில்.குற்றவாளி என, அறிவிக்கப்பட்ட, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர், லாலு பிரசாத் யாதவிற்கு, 65 பீகாரில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, 1997ல் இருந்து, 2005 வரை ஆட்சி செய்தது. அப்போது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்ததோடு, ஊழலும் தலைவிரித்து ஆடியது.

தெற்கு ரஷ்யா: ரயில் நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்

ரஷ்யாவின் தென்னகரமான வோல்கோகிராட்டில் ரயில் நிலையமொன்றில் நடந்துள்ள தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய இந்தத் தாக்குதலில் 50 பேர்வரையில் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கூறுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பினரும் இன்னும் உரிமை கோரவில்லை. உள்ளூர் நேரப்படி 12.45 மணியளவில் தாக்குதல் நடந்துள்ளது. கடந்த அக்டோபரிலும் பேருந்தொன்றில் பெண் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படுபவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஸோச்சி நகரில் இன்னும் 6 வாரங்களில் நடக்கவுள்ள 2014-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆயுதக்குழுக்கள் வன்முறைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அரச மட்டத்தில் கவலைகள் உள்ளன. வடக்கு கோக்காசஸ் பிராந்தியத்தில் இயங்கும் கிளர்ச்சிப் படையினர் அண்மைய ஆண்டுகளாக ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்திவருகின்றனர்.

இஸ்ரேல் - லெபனான் எல்லையில் முறுகல்

லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கட்டுகள் இஸ்ரேலின் வடபகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன. கிரியட் ஸ்மோனா நகருக்கு அருகே இந்த ராக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது. ஆனால், சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. தாம் பதிலுக்கு ஆர்ட்டிலறி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனானிய தீவிரவாத அமைப்பான ஹெஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான போரை அடுத்து, 2006ஆம் ஆண்டுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பெருமளவில் அமைதியாகவே இருந்து வந்தது. ஆனால், முன்னணி அரங்கப் பகுதியில் லெபனானிய இராணுவத்தினரின் சினைப்பர் தாக்குதலில், வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த இஸ்ரேலிய சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த இரு வாரங்களாக அங்கு பதற்றம் அதிகரித்திருந்தது.

கூடுதல் அதிகாரங்களைக் கோருகிறது மனித உரிமைகள் ஆணையம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை பலப்படுத்துமாறு ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கோரியிருந்தார்

மீனவர்கள் பிரச்சனை : " ஜனவரி 20 சென்னையில் பேச்சுவார்த்தை"

இந்திய இலங்கை மீனவர்களிடையே ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் இதுபற்றி தங்களிடம் தெரிவித்ததாக, தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ உறுதிப்படுத்தினார். இந்திய அரசும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சும் கலந்துபேசியே இந்தத் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் சல்மான் குர்ஷித் தங்களிடம் உறுதிப்படுத்தியதாக இளங்கோ கூறினார். மீனவர்களின் பிரதிநிதிகளை இக்கூட்டத்தில் பங்கேற்கச் செய்வதோடு தமிழக அரசின் சார்பில், குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து அமைச்சர்களும் பங்கேற்பார்கள் என தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேபோல் இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசுகளின் சார்பிலும் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்குபெறுவார்கள் என்றும் தங்களுக்கு சொல்லப்பட்டுள்ளதாகவும் இளங்கோ கூறுகிறார். நிபந்தனைகள் இல்லை, கோரிக்கை உண்டு இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்திய தேசிய மீனவர் பேரவையின் சார்பில் எந்த முன் நிபந்தனைகளும் வைக்கப்படவில்லை என்றாலும், இலங்கை மற்றும் இந்தியச் சிறைகளிலுள்ள மீனவர்களும்- பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக இருநாட்டுச் சிறைகளிலிருந்தும் அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் என்பதை தம்மிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தியதாகவும் இந்திய தேசிய மீனவர் பேரவையின் தலைவர் கூறினார். ஆனால் விசைப்படகுகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று சல்மான் குர்ஷித் கூறியதாகவும் இளங்கோ சுட்டிக்காட்டினார். சென்னையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்னர் தமிழக முதல்வரை சந்திக்க இந்திய தேசிய மீனவர் பேரவை நேரம் கோரியுள்ளது என்றும் இளங்கோ தமிழோசையிடம் மேலும் தெரிவித்தார்.