Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, January 17, 2014

மோடியின் எளிமை நம்மிடம் இல்லை, அவரை விமர்சிக்கக் கூடாது... அய்யருக்கு உமர் அப்துல்லா கண்டனம்

ஜம்மு காஷ்மீர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பிரதம வேட்பாளரான மோடி வெற்றி பெற மாட்டார். நாங்கள் வேண்டுமானால் டீக்கடை வைத்துத் தருகிறோம்' என்ற காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யரின் பேச்சுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட மணி சங்கர் அய்யர் மோடி குறித்துப் பேசுகையில், ‘நம் நாட்டிற்கு மோடியால் ஒருபோதும் பிரதமராக முடியாது. ஒருவேளை அவர் விரும்பினால் அவருக்கு நாங்கள் வேண்டுமானால் ஒரு டீக்கடை அமைத்து தருகிறோம். காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்கட்டும் எனத் தெரிவித்திருந்தார். மணி சங்கர் அய்யரின் இத்தகைய கருத்துக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘மோடி குறித்து எதிர்மறையான கருத்து நிறைய உள்ளது மோடியிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால் அவரது அடிப்படை, அவர் வந்த விதம் மிக மிக சாதாரணமானவை, எளிமையானவை. நம்மிடம் நிச்சயம் அப்படிப்பட்ட அடிப்படை இல்லை. எனவே அவரை கேலி செய்து நமது பிரசாரத்தை பலமாக்க நாம் முயலவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

அய்யருக்கு பாஜக பதிலடி

டெல்லி: சாதாரண டீ விற்ற நரேந்திர மோடிதான், காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டப் போகிறார் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது. நரேந்திர மோடியால் பிரதமராக முடியாது. அவர் டீ விற்கத்தான் லாயக்கு. வேண்டுமானால் அவருக்கு காங்கிரஸ் கூட்ட வளாகத்தில் கடை போட்டுத் தரத் தயார். அவர் அங்கு வந்து டீ விற்கட்டும் என்று மணிசங்கர அய்யர் பேசியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அய்யரின் பேச்சுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறுகையில், ஒரு சாதாரண முன்னாள் டீ விற்பனையாளர், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி, அதைத் தரை மட்டமாக்கி, பிரதமர் பதவியை அடைந்து, இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தி நிரூபிக்கும் நாள் நெருங்கி விட்டது. 2014 தேர்தலில் இதுதான் போராட்டக்களமாக மாறப் போகிறது. அதை சந்திக்க நாங்கள் தயார். அவர்களும் தயாராக இருக்கட்டும் என்றார் அவர்.

பாஜகவை தாக்கிப் பேசிய ராகுல் காந்தி

சோனியா காந்தி தான் எங்களின் சக்தி. ஜனநாயகம் என்பது தனி மனிதரின் ஆட்சி அல்ல. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி. ஏழை மக்களுக்கு உதவ காங்கிரஸார் பாடுபட வேண்டும். மக்கள் திறமையான, நேர்மையான அரசை விரும்புகிறார்கள். நாங்கள் தான் லோக்பால் மசோதாவை நிறைவேற்றினோம். நாங்கள் அதிகாரத்தை ஒருவரிடம் கொடுக்க மாட்டோம். மாறாக மக்களிடம் கொடுப்போம். ஊழலுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பல மசோதாக்களை கொண்டு வருவோம். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பிரச்சனை செய்கிறார்கள். நாங்கள் உங்களுக்கு வீடு அளிப்போம். உங்களின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம். நாங்கள் 5 ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். 9 மானிய விலை சிலிண்டர்கள் போதாது 12 வேண்டும் என்பதை பிரதமரிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்கட்சிகளுக்கு மார்க்கெட்டிங் தான் தெரியும். நாட்டின் பயணத்தில் 2014ம் ஆண்டு தேர்தல் முக்கிய திருப்புமுனை ஆகும். நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் மதிக்கிறோம். நாம் ஒற்றுமைாக இருக்க நாடு நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது. கடுமையான போர்க்களம் நமக்கு முன்பு உள்ளது. இந்த களத்திற்கு வீரத்துடன் செல்வோம். நாம் நம்பிக்கையை இழக்கக் கூடாது. நாட்டு மக்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.

பிரபாகரன் மீண்டும் வருவார்; தமிழீழத்தை மீட்பார்: வைகோ

கலிங்கபட்டி: "விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார் என்றும், அந்த காலம் வெகுவிரைவில் வரும் என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா கலிங்கபட்டியில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடந்த 4 நாட்களாக தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நேற்று நடைபெற்ற வீரத்தாய் வேலுநாச்சியார் நாடகத்தை தொடங்கி வைத்து வைகோ பேசுகையில், நான் எந்த கூட்டணியில் இருந்தாலும் நானும் ம.தி.மு.க.வும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம். நான் பள்ளி பருவத்தில் நடந்த கடமை நாடகத்தில் கதாநாயகனாகவும், வீரமுழக்கம் நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாகவும், சாம்ராட் அசோகாவில் அசோகராகவும் நடித்தேன். வேணுகோபால் சர்மா என்பவர் ஒன்பது ஆண்டுகளாக திருவள்ளுவரின் ஒவியத்தை வரைந்து அப்போது முதல்வராக இருந்த பக்தவச்சலத்திடம் அளித்தார். அவரது மகன் தான் ஸ்ரீராம் சர்மா இந்த நாடகத்தை நடத்துகிறார். வீரமங்கை வேலுநாச்சியாருக்கும் விடுதலைபுலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரனுக்கும் 19 ஒற்றுமைகள் உண்டு. அதில் ஒன்றை மட்டும் கூறுகிறேன். வேலுநாச்சியார் 8 ஆண்டுகள் மறைந்திருந்து வெள்ளையரை வீழ்த்தி சிவகங்கையை மீட்டார். அதே போல பிரபாகரன் மீண்டும் வந்து ராஜபக்சே கூட்டத்தை வீழ்த்தி தமிழீழத்தை மீட்பார். அந்த காலம் வெகுவிரைவில் வரும். சோனியாவின் ஏவுகணை கொண்டு சிங்களர்கள் தமிழீழத்தை தகர்த்தனர். மக்கள் மன்றத்தில் நியாய கூண்டில் அவர்களால் துன்பப்பட்ட ஈழத்தமிழர்களும், குற்றவாளி கூண்டில் அவர்கள் கொன்றெடுத்த சோனியா கூட்டமும் நிற்கும். இந்த நாடகம் நான் அரசியலுக்காக போடவில்லை. வீரம் செறிந்த இந்த மண்ணில் வீரத்தாயின் நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது" என்றார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ப.ஆ.சரவணன், முன்னாள் எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமார், சிவகாசி செய்யது இப்ராஹிம், இமயம் ஜெயராஜ்,மாநில மாணவரணி நிர்வாகி தி.மு .ராஜேந்திரன், ம.தி.மு.க இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமதுஅலி உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

உலகப்போர் வீரர்களின் டயரிகள் இணையத்தில் பிரசுரம்

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய டயரிக்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1914ம் ஆண்டில் முதலாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து பிரான்சில் ப்ளாண்டர்ஸிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறியது வரையிலான காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி பிரிட்டிஷ் ராணுவப் பிரிவுகள் அதிகார பூர்வமான டயரிகளில் எழுதி வைத்திருந்தன. மொத்தம் சுமார் 1.5 மிலியன் டயரிப் பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் இது வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 டயரிகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய முன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன. தனிப்பட்ட டயரிக் குறிப்புகளும் இணையத்தில் அதிகாரபூர்வ டயரிக்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட டயரிக்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன. முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்ஸன் எழுதி வைத்திருந்த சொந்த டயரியும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது. கேப்டன் பேட்டர்ஸன், தனது குறிப்பு ஒன்றில், போரின் போது தான் கண்ட காட்சிகள் "விவரிக்க முடியாதவை" என்று கூறியிருந்தார். "பதுங்கு குழிகள் ,பொருட்கள், ரத்தக்கறை தோய்ந்த ஆடைகளின் பகுதிகள் , வெடி மருந்துகள், கருவிகள், தொப்பிகள் மேலும் இன்ன பிற பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடக்கின்றன. எல்லாத் திசைகளிலும் மனித உடல்கள், அவைகளில் சில நமது ஆட்களின் உடல்கள்", என்று அவர் ஒரு குறிப்பில் விவரித்திருந்தார். இந்தக் குறிப்பை எழுதிய ஆறு வாரங்களில் அவரும் கொல்லப்பட்டார். இந்த டயரிகளை இணையத்தில் பிரசுரிக்கும் திட்டம், முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாகும். நூற்றுக்கணக்கான பெட்டிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த டயரிகளை 25 தன்னார்வலர்கள் ஸ்கேன் செய்து இந்த வேலையை செய்து வருகின்றார். வரலாற்று ஆர்வலர்களுக்கு புதிய வாய்ப்பு இந்த டயரிகள் பிரசுரிக்கப்படுவதன் மூலம், பொதுமக்கள், வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் குடும்ப வரலாற்றை எழுதுபவர்கள், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் போன்றோருக்கு, அதிகாரபூர்வ ஆவணங்களைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைக்கிறது என்று கூறினார், தேசிய ஆவணக் காப்பகத்தில் ராணுவ ஆவணங்கள் பிரிவில் வல்லுநராகப் பணிபுரியும் வில்லியம் ஸ்பென்சர். இதன் மூலம் இந்த முக்கியமான காலகட்டத்தினைப் பற்றி, புதிய கண்டுபிடிப்புகளும் புதிய பார்வைகளும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்காலத்தில், முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த டயரித் திட்டம் அவர்களது குரல்களை நாம் கேட்க வகை செய்வதாகக் கூறினார் பிரிட்டிஷ் கலாசார அமைச்சர் மரியா மில்லர். முதலாம் உலகப் போரில் பங்கேற்ற கடைசி பிரிட்டிஷ் வீரர், ஹாரி பேட்ச், 2009ல் தனது 111வது வயதில் காலமானார். உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் ஷூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமானார்.

காமெடியன்கள் கொஞ்சம் "லூஸ்"தான் ! -- ஆய்வு

நகைச்சுவையாளர்கள் கொஞ்சம் 'பைத்தியம்' பிடித்தவர்கள்தான் என்ற் பலர் சந்தேகிப்பதுண்டு; அது உண்மைதான் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வல்லுநர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நகைச்சுவையாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில், அவர்கள் பைத்தியக்காரத்தனமான சில குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் ஆண், பெண் காமெடியன்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தம்முள்ளேயே மூழ்கியிருக்கும் மனோபாவம் உடையவர்களாகவும், சில சமயங்களில் மிகவும் வெளிப்படையாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருந்ததாகவும் இருந்தனர். நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவதை ஒரு வகையான, 'சுய சிகிச்சை' முறையாக அவர்கள் பயன்படுத்தினர் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

ஆட்சியைப் பிடிப்போம், இஸ்லாமியச் சட்டம் அமல், தாலிபான்கள் சூளுரை

ஆப்கானிஸ்தானில் தாங்கள் மிக விரைவில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று தாலிபான்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது தங்களது அணுகுமுறை கடுமையாக இருக்கும் என்றும், அதில் எந்தத் தளர்வும் இருக்காது, தண்டனைகளும் அவ்வகையிலேயே இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமியச் சட்டம் நிரந்தரமானது, அது அமல்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என, தாலிபான்களின் பேச்சாளர் ஜைபுல்லா முஜாகித் பிபிசியின் உலக விவகாரச் செய்திகளின் ஆசிரியர் ஜான் சிம்ப்ஸனின் கூறினார். எனினும் 2001 ஆம் ஆண்டு தாங்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னர், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தபோது இருந்ததைவிட தங்களது நடவடிக்கையில் சில மாறுதல்கள் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். போலித் தேர்தல்'அமெரிக்கத் தலைமையிலான படைகள், கடந்த 2001 ஆம் ஆண்டு தால்பான்களை ஆட்சியிலிருந்து அகற்றினர். ஆப்கானிஸ்தானின் பெரும்பாலானப் பகுதிகள் ஏற்கெனவே தமது கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் தாலிபான்களின் பேச்சாளர் கூறுகிறார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களை, 'போலித் தேர்தல்கள்' எனக் கூறும் அந்தத் தாலிபான் பேச்சாளர், அதில் பங்குபெறும் எந்த அரசியல் தலைவர்களுடனும் தங்களுக்கு தொடர்புகள் இருக்காது என்றும் கூறுகிறார். நேட்டோ தலைமையிலான தாக்குதல் படைகள் இந்த ஆண்டின் இறுதியில், நாட்டின் பாதுகாப்பை ஆப்கானிய இராணுவத்திடம் கையளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது

பழம்பெரும் இந்திய நடிகை சுசித்ரா சென் காலமானார்

புகழ் பெற்ற இந்திய நடிகை சுசித்ரா சென் தனது 82 ஆவது வயதில் காலமானார். மார்பு நோய் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவரின் உடல்நிலை வியாழனன்று மோசமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். வங்காள மொழி திரையுலகின் ஒரு முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த சுசித்ரா சென், 'தேவதாஸ்' மற்றும் 'ஆந்தி' உட்பட பல ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். வங்காள திரையுலகில் உத்தம் குமாருடன் இவர் ஜோடியாக நடித்த படங்கள் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று, இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வங்காள திரையுலகில் இவர்கள் பிரபலமான ஜோடியாக வலம் வந்தனர். 1978ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஓய்வுபெற்ற இவர் அதற்கு பிறகு பொது வாழ்க்கையிலிருந்தும் விலகினார். தனது உறவினர்களைத் தவிர வேறு எவரையும் பார்க்க மறுத்து இவர் துறவி போல வாழ்ந்து வந்தார் என்று கூறப்படுகின்றது. புகழின் மறுவரையறை இந்தியாவின் மிகவும் பிரபலமான நிரந்தரமான திரைஜோடிகளில் எப்போது ஒரு பாதியாகத் திகழ்ந்த சுசித்ரா சென் பல நடிகர்கள் செய்யாத வகையில், நட்சத்திர அந்தஸ்தை மறுவரையறை செய்துள்ளார் என்று திரை விமர்சகர் சாய்பல் சாட்டர்ஜீ பிபிசியிடம் தெரிவித்துள்ளார். வங்காள திரையுலகை இவரும் உத்தம் குமாரும் வலம் வந்த இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், இவர் ஹாலிவுட் நடிகை கெரட்டா கர்போ போல பொது வாழ்க்கையிலிருந்து விடைபெற்றது அவரது வசீகரத்தை மேலும் அதிகப்படுத்தியது என்றும் சாய்பல் சாட்டர்ஜீ கூறினார். " அவரிடம் ஒரு அடக்கி வாசித்த கவர்ச்சி இருந்தது. இதனுடன், அவரிடம் காணப்பட்ட பெண்மைத் தன்மை மிகுந்த கவர்ச்சி, உணர்ச்சிக் குவியல், ஆளுமை மிகுந்த ஈர்ப்புத் தன்மை ஆகியவை எல்லாம் சேர்ந்து, அவருக்கு ஈடாக இந்திய சினிமாவில் வேறு எவரும் இல்லை என்ற அளவிற்கு மற்றவர்களை அவர் விஞ்ச வைத்தது,” என்றார் சாய்பல் சாட்டர்ஜீ. 1953ஆம் ஆண்டில் உத்தம் குமாருடன் சேர்ந்து நடித்த ‘ஷேர் சௌட்டர்’ ( எழுபத்தி நான்கரை) என்ற மிகவும் பிரபலமான நகைச்சுவை திரைப்படம் மூலம் இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானார். 1959ஆம் ஆண்டில் ‘தீப் ஜுவல்லே ஜாய்’ என்ற திரைப்படத்தில், ஆண் மனநோயாளிகளுடன் நெருங்கிய உறவை வளர்க்க மனநல மருத்துவரிடம் பணியாற்றும் மருத்துவ உதவியாளராக சுசித்ரா நடித்த வேடம் தான் அவருடைய மிகச் சிறந்த வேடம் என்று கருதப்படுகிறது. பெண்மானின் கண்களையுடைய, கறுமை நிறம் கொண்ட இவர் வங்காளத்தின் மிக பெரிய நட்சத்திரம் என்று இவரை மறைந்த ஹிந்தி நடிகர் தேவ் ஆன்ந்த் வர்ணித்திருந்தார். சுசித்ராவின் மகள் நடிகை மூன் மூன் சென், அவருடைய பேத்திகள் ரியா சென் மற்றும் ராய்மா சென் ஆகியோரும் இருக்கின்றனர். பேத்திகளும் திரை நட்சத்திரங்கள்தான்.

எனக்கு வேணாம்.... செல்போன்களைத் தூக்கிப் போட்டு உடைத்த நடராஜன்

தஞ்சாவூர்: எனது போனை முதல்வர் ஜெயலலிதா ஒட்டுக் கேட்கிறார். நான் என்ன செய்கிறேன், என்ன பேசுகிறேன் என்பதை ஒட்டுக் கேட்கிறார். எனக்கு இந்த செல்போனே வேண்டாம் என்று கூறி தன்னிடமிருந்த ஐந்து செல்போன்களையும் கீழே தூக்கிப் போட்டு உடைத்து விட்டார் எம்.நடராஜன். சசிகலா கணவரான நடராஜன் தஞ்சையில் நடந்த பொங்கல், கலை இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திடீரென அவர் ஆவேசமடைந்தார். அவர் பேசுகையில், நான் அரசியலுக்கு வர வேண்டும் என 10 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். நான் என்ன செய்கிறேன். என்ன பேசுகிறேன் என்பதை அறிந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா என்னுடைய பேச்சுகளை ஒட்டு கேட்கிறார். இதனால் இனி நான் மொபைல் போன்களை பயன்படுத்த மாட்டேன். இவை எனக்கு வேண்டாம் என்று கூறிய அவர் தன்னிடமிருந்து ஐந்து செல்போன்களையும் கீழே தூக்கி எறிந்தார். இதனால் நடராஜன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டனர்.

3.30 மணிக்கு பேசுறேன், பொறுமை... காங். தலைகளை சாந்தப்படுத்திய ராகுல்

டெல்லி: டெல்லி அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் இன்று ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் கோஷமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை அமைதிப்படுத்திய ராகுல் காந்தி, நான் மாலையில் பேசுகிறேன். அதுவரை அமைதியாக இருங்கள் என்று அமைதிப்படுத்தினார். டெல்லியில் இன்று காலை நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், சோனியா காந்தி உரை நிகழ்த்தினார். அப்போது ராகுல் காந்தி குறித்து எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது என்று அறிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த காங்கிரஸ் நிர்வாகிகள், தலைவர்கள், சோனியா காந்தி பேசி முடித்த பிறகு, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி வேகமாக எழுந்து வந்து மைக்கைப் பிடித்தார். எழுந்து நின்று தனக்கு ஆதரவாக கோஷம் போட்டவர்களைப் பார்த்து, அமைதியாக உட்காருங்கள் என்று அமரச் செய்தார். பின்னர், உங்களது கருத்துக்களுக்கு, கோரிக்கைககளுக்கு நான் மாலை 3.30 மணிக்குப் பேசும்போது பதில் சொல்கிறேன். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும். பேசுபவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து கூட்டத்தில் அமைதி திரும்பியது. ராகுல் காந்தி இன்று மாலை பேசும்போது, காங்கிரஸாருக்கு உற்சாகம் தரும் வகையில் ஏதாவது இன்ப அதிர்ச்சி தருவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

குலாம் நபி ஆசாத்

டெல்லி: பி.ஆர். திறமை நமக்கு சரியாக இல்லை என்பது உண்மைதான். ஆனால் மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ்தான் எப்போதுமே சூப்பர் ஹீரோ என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்

இந்திய நடனமாதுக்கள் நாடு கடத்தப்பட்டனர்

இந்திய நடன மாதுக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் இலங்iயின் கேளிக்கை விடுதிகளில் நடன மாதுக்களாக கடமையாற்றிய ஐந்து இந்திய யுவதிகள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் குறித்த பெண்கள் கடமையாற்றி வந்தனர். வீசா காலம் முடிவடைந்து நான்கு மாதங்கள் வரையில் குறித்த பெண்கள் நாட்டில் தங்கியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பெண்கள் மாதாந்தம் 65000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் – ராஜித சேனாரட்ன

இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டாலும் அத்து மீறல்களுக்கு இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்களை தடை செய்ய வேண்டும் - விக்ரமபாகு

கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். பௌத்த கடும்போக்குடைய சில அமைப்புக்கள் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த கடும்போக்குடைய பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டு;த் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிஹல ராவய போன்ற அமைப்புக்களுக்கு அரசாங்கமே ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த கடும்போக்கு அமைப்புக்களுக்கு காணப்படும் அரசியல் செல்வாக்கு காரணமாக காவல்துறையினர் குறித்த அமைப்புக்களின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை மூடிமறைக்க முயற்சித்து வருவதாக கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

வலி வடக்கில் கிராமத் தலைவர்களின் விவரம் திரட்டப்படுகின்றன

கிராம ரீதியான அமைப்புக்களின் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களின் விவரங்கள் படையினரால் திரட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாள்களாக அந்தந்தப் பிரிவு முகாம்களின் படையினரே இந்த விவரம் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ். மாவட்டத்தின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா கடந்த வாரம் பதவியேற்றிருந்தார். இதன் பின்னர் கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த மினி முகாம்கள் படையினரால் அகற்றப்பட்டிருந்தன. இவ்வாறானதொரு நிலையில் கிராம மட்ட அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், ஆலய அமைப்புக்கள், சனசமூக அமைப்புக்களின் தலைமைப் பொறுப்புக்களில் உள்ளவர்களின் விபரங்களை இப்போது படையினர் திரட்டி வருகின்றனர். இது தொடர்பில்படையினரால் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு அவை பூரணப்படுத்திப் பெறப்படுகின்றன. குறிப்பாக வலி.தென்மேற்கு பிரதேசத்திலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.