Breaking News

JOINING THE COMMUNITIES--------------------->Contect:as soon as
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016

RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Thursday, December 5, 2013

இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் காஷ்மீர் மக்கள்

இந்தியாவிற்கு எண்ணற்ற பிரச்சினைகள் எத்தனையோ இருப்பினும் எல்லாவற்றிற்கும் தலையாய பிரச்சினையாக கருதப்படுவது காஷ்மீர் பிரச்சினைதான். ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் முதல் இதுநாள் வரையில் தீர்க்கப்படாமல் நெடுந்தொடர்போல் நீடிக்கிறது இப்பிரச்சினை. காஷ்மீரின் பெரும்பான்மையான பகுதிகள் இந்தியாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. இதற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு, அதன் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டு சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு சவால் விடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965 மற்றும் 1999ல் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் நேருக்கு நேர் சண்டையிட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலிகொண்ட இந்த போர்களின் முடிவில் எல்லை தொடர்பாக சில ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதிலும், முழுமையான தீர்வுக்கு வழி ஏற்படவில்லை. மாறாக, இருதரப்பு உறவில் விரிசல்தான் அதிகரித்தது. அவ்வப்போது எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டு சிறுசிறு தாக்குதல்களும் நடப்பதால் பதட்டமான சூழ்நிலை தொடர்கிறது. 1999-க்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் முன்வந்ததால் ராணுவ மோதல்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து, உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் ஆயுதப் போட்டியும் தலைதூக்கிவிட்டது. இந்த பதட்டத்திற்கு மத்தியில் காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர்களின் தலையை துண்டித்து கொலை செய்ததால், அமைதி பேச்சுவார்த்தைக்கும் வேட்டு வைத்துவிட்டது பாகிஸ்தான் ராணுவம். இதனால் காஷ்மீருக்காக மீண்டும் மோதும் நெருக்கடியான சூழ்நிலை உருவானது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், இந்தியாவை சண்டைக்கு இழுக்கும் போக்கிலேயே அதன் அடுத்தகட்ட செயல்பாடுகள் அமைந்தன. சமீபத்தில் ஐ.நா. பொதுக்கூட்டம் நடைபெற்றபோது இருநாட்டு பிரதமர்களும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக காரசாரமாக பேசிக்கொண்டனர். அதன்பின்னர் எல்லையில் பதட்டம் தணிய ஆரம்பித்தாலும், அவ்வப்போது வெளியாகும் அறிக்கை மோதல்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் உள்ளன. இதன் உச்சகட்டமாக, காஷ்மீருக்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே 4-வது முறையாக எந்த நேரத்திலும் போர் ஏற்படும் என்று நவாஸ் ஷெரீப் இப்போது கூறியிருக்கிறார். தான் மடிவதற்குள் காஷ்மீரை இந்தியாவிடம் இருந்து பிரித்தே தீருவதாக அவர் சூளுரைத்திருப்பதாகவும் செய்தி வெளியாகி புதிய புயலை கிளப்பியிருக்கிறது. ஆனால், அதுபோன்ற மிரட்டும் தொனியில் நவாஸ் பேசவில்லை என்று அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தின்படியும், ஐ.நா. தீர்மானத்தின்படியும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று நவாஸ் தனது விருப்பத்தை மீண்டும் தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களில் பதிலடி கொடுத்த இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தனது வாழ்நாளில் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரிட்டு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியிருப்பது, கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. இதுபோன்ற வாய்ச்சவடால்கள் புதிய சர்ச்சைகளையும், விவாதங்களையும் மட்டும் தான் உருவாக்கும். அமைதியிழந்து இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் காஷ்மீர் மக்களுக்கு எந்த நன்மைக்கும் வழிகோலாது. ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கூறி வந்தாலும், அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும்போது ‘சாண் ஏறினால் முழம் வழுக்கும்’ என்ற முதுமொழிக்கேற்ப, ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுகிறது. இந்த நிலை மாற இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ?

No comments:

Post a Comment