
சிறிலங்கா அரசாங்கம் தனது படைகளை ஏவிவிட்டு கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தியதன் மூலம் வடக்கு கிழக்கு மக்களை வெளிநாடுகளுக்கு துரத்தியடித்துள்ள நிலையில் இன்று அவர்களின் காணிகளையும் சொத்துக்களையும் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
வெளிநாடுகளில் நிரந்தரமாக வசித்து வரும் வடமாகாணத்தை சேர்ந்தவர்களின் சொத்துக்கள் காணிகள் மற்றும் வீடுகள் அரசுடமையாக்கப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் குடிசன மதிப்பீட்டில் வெளிநாட்டில் உள்ளவர்களின் வீடுகள் பற்றிய விபரங்கள் தெரியவரும் என்றும் அந்த தரவுகளின் அடிப்படையில் அவர்களின் காணிகள் அரச உடைமையாக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
1982ம் ஆண்டின் பின்னர் போர் காரணமாக ஏற்பட்ட சொத்து மற்றும் உயிர்ச் சேதங்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக முழுமையாக நாட்டை விட்டு வெளியேறி வாழ்ந்து வரும் வடக்கு மக்களின் சொத்துக்களும் இவ்வாறு அரசுடமையாக்கப்பட உள்ளது. முக்கியமாக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களின் வீடுகள் என இனங்காணப்படும் வீடுகளை உடனடியாக அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்த கடும் யுத்தம் காரணமாக வடக்கில் இருந்து சுமார் 10 லட்சம் வரையான தமிழ் மக்கள் வெளியேறி வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் காணிகளையும் வீடுகளையும் அரசுடமையாக்கி அவற்றை சிங்களவர்களுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களால் தமது அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அபகீர்த்தி ஏற்பட்டு வருவதாக மகிந்த ராஜபக்ச அறிவித்து வருகின்ற நிலையில், அண்மையில் கோத்தபாய ராஜபக்ச கருத்து வெளியிடும் போது புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை அடக்குவதில் சிறிலங்கா இராஜதந்திர ரீதியில் வெற்றிகளைக் கண்டுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், வடக்கு கிழக்கிலுள்ள புலம்பெயர் தமிழ் மக்களின் வீடுகள் காணிகள் அடங்கிய சொத்துக்களை அபகரிக்க முற்படும் போது வேறு வழியின்றி புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்காவுக்கு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று மகிந்தவும் கோத்தாவும் கணக்குப் போடுகின்றனர். இந்த கணக்கின் அடிப்படையிலேயே தற்போது அவர்களின் காணிகள் அரசுடமையாக்கப்படவுள்ளதென்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எனவே, வெளிநாடுகளில் பெருந்தொகையான சொத்துக்களையும் வீடு வாசல்களையும் வாங்கிக் குவித்துவிட்டு தொடர்ந்தும் சிறிலங்காவில் தங்கியிருந்து பணத்தைச் சுரண்டிக்கொண்டிருக்கின்ற மகிந்த குடும்பம் வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களின் காணிகளை மட்டும் சுவீகரிக்க முற்படுவது எந்த வகையில் நியாயம் என்று யாழ்.குடாநாட்டிலுள்ள புலம்பெயர் தமிழர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த மோசடி வேலைத்திட்டங்களை முறியடித்து தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டியது அவசிய தேவையாக உள்ளது. குறிப்பாக, தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் அரசுடமையாக்க வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தாங்கள் வாழ்கின்ற நாடுகளின் அரசாங்கங்களிடம் புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுக்க வேண்டியது தற்போது மிக அவசியாக உள்ளது. வேண்டுமாயின் அந்தந்த நாடுகளில் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழ் மக்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment