
இனப்படுகொலையில் ஈடுபட்ட மகிந்த அரசாங்கத்திற்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டுக்களுடன் மேற்குலகம் அணிதிரளத் தொடங்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மகிந்த அரசாங்கத்தின் மீது காத்திரமான நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்கு மேற்குலம் தாயராகிவருகின்றது.
கடந்த மார்ச் மாதம் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்ட ஒரு வருடகால அவகாசத்தை சிறீலங்கா அரசாங்கம் பயன்படுத்தத் தவறிவருகின்ற நிலையில், மேற்குலகம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நாடுகளை அணிதிரட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மகிந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக நாடுகளை அணிதிரட்டும் நடவடிக்கையில் பிரித்தானியா மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இலங்கையில் மனித உரிமைகள் விடயம் உட்பட நிலைமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாயம் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இனிவரும் மாதங்களில் தொடர்ந்து பேசவுள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது. பிரித்தானியா, மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவாகியுள்ளது. எதிர்வரும் மார்ச்சில் மனித உரிமைகள் சபையில் அமர்வுகள் நடைபெறுவதற்கு முன்பாகப் பிரித்தானியா, இலங்கை விடயத்துக்கு சர்வதேச ஆதரவை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபடும் என பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹ§யூகோ ஸ்வயர், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தபோது கூறியுள்ளார்.
இதேவேளை, உள்நாட்டுப் போரில், இராணுவத்தின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், உலக நாடுகள் பொறுமையாக இருக்காது என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறியுள்ளார். போர்க் குற்றம் தொடர்பாக சிறீலங்கா அந்நாட்டு சட்டதிட்டம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். ஆனால், அந்நாட்டில் அரசியல் மற்றும் மனித உரிமை நிலை கவலை அளிப்பதாக உள்ளது. போருக்கு பின்னர் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அந்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டும். நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லை என்றால் உலக சமூகம் பொறுமையாக இருக்காது என்று அவர் எச்சரித்திருக்கின்றார்.
இதேவேளை, பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றாத நிலையில் கனடாவின் சார்பில் கலந்து கொண்ட அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் தீபக் ஒபராய், தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து தனது இலங்கை பயணம் பற்றிய விடயத்தில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இச்சந்திப்பின் பின்னர் தமிழ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் மனித உரிமைகள் பொறுப்புக்கூறல், இனங்களுக்கான ஒருமைப்பாடு ஆகியவற்றில் ஆழ்ந்த அதிருப்தியை வெளியிட்டார்.
அண்மையில் ரொறன்ரோ நகரில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில் ஒபராய் இதனை வெளியிட்டார். பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை சென்ற தீபக் ஒபராய், மக்கள் பிரதிநிதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், யாழ் கத்தோலிக்க ஆயர், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண முதலமைச்சர் உட்பட பல்வேறு தரப்பினருடனான சந்திப்புக்களிலும் கலந்து கொண்டதை கனடியத் தமிழ் மக்களிடம் விளக்கினார்.
யாழ்ப்பாணம் செல்வதற்கு தான் விரும்பியபோது அதற்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு செல்வது சிரமம் என்று சிறீலங்கா அரசு மறுத்துரைத்து தடுத்துநிறுத்த முயன்றபோதும் தாம் தரைவழியாகப் பயணிக்க அனுமதிபெற்று 8 மணிநேரம் பயணித்து யாழ் சென்று தமிழ் மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்து அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஒபராய், யாழில் மக்கள் மிகவும் பயம் நிறைந்த ஒரு வாழ்க்கையை வாழ்வதை தான் அவதானித்ததாகவும் கூறினார்.
மீள்கட்டுமானம், மீள்குடியேற்றம், வாழ்வாதாரத்தில் எழுச்சி போன்ற எதனையும் தான் கண்டுகொள்ள முடியாமை தனக்கு வருத்தம் தருவதாகத் தெரிவித்த அவர், சர்வதேச சமூகம் சிறீலங்காவிடம் இதுகுறித்து போதிய மாற்றங்களைக் கோரும் என்றும் குறிப்பிட்டார். ஏற்கனவே சுதந்திர விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள கனடா, தொடர்ந்தும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும் என்று உறுதியளித்த ஒபராய், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கை குறித்த விவாதம் வரும்போது அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் உட்பட தொடர்ந்தும் மக்களின் வாழ்விடங்கள் மீள வழங்கப்படாமை, ஊடக சுதந்திரமின்மை, தொடரும் படுகொலைகள், பாதுகாப்பற்ற சூழல், மக்கள் அச்சத்துடன் வாழ்கின்ற சூழ்நிலை போன்ற பல்வேறு விடயங்களிலும் முன்னேற்றம் உள்ளதா என்ற கேள்வியை கனடா முன்வைக்கும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் மக்கள் அனைவரும் இலங்கை அரசில் அதிருப்தி கொண்ட நிலை இருப்பதை தான் அவதானித்ததாகவும், பிரதம நீதியரசர் சிராணியை பதவி நீக்கம் செய்தமை, ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிலையங்கள் மீதான தாக்குதல்கள், ஜனநாயக விரோத மற்றும் அச்சுறுத்தல் சூழ்நிலைகள் போன்றவற்றை நேரில் பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டதுடன், அது குறித்து கனடா போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஜெனீவாவில் மகிந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக மேற்குலகம் காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதற்கான நடவடிக்கைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டதை இவர்களது கருத்துக்கள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன. மகிந்தவின் ஆட்சியை அகற்றிவிட்டு, புதிய ஆட்சியாளர்களை அமர்த்துவதற்கு மேற்குலம் முயன்றுவருவதையே இவை காட்டிநிற்கின்றன. இந்நிலையில், இத்தாலி தலைநகர் ரோமைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (The Permanent People’s Tribunal)’ இலங்கைப் போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள், உலக நாடுகளின் பங்களிப்புகள், சமாதானப் பேச்சுக்களில் ஏற்பட்ட தோல்விகளுக்கான காரணம் என்பன குறித்து தனது இரண்டாவது விசாரணைகளை ஜேர்மனியின் பிரெமென் நகரில் கடந்த 7ம் திகதி சனிக்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றது.
உலகின் புகழ்வாய்ந்த நீதிபதிகள் (யூரர்) குழுவினரும், சர்வதேச மனித உரிமைகள் குழுவினரும் இன்னும் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் இணைந்து மேற்கொண்டுள்ள இந்த விசாரணை இன்று 10ம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவடைகின்றது. ‘நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின்’ இரண்டாம் கட்ட அமர்வுகளே தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் முதற்கட்ட அமர்வுகள் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் அயர்லாந்தின் டப்பிளின் நகரில் நடைபெற்றிருந்தது.
டப்பிளின் தீர்ப்பாயத்தின் போது ‘இனப்படுகொலை’ தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நீதிபதிகள் குழுவிடம் முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும், அப்போது அதை நிறுவுவதற்குத் தகுந்த சாட்சிகளும் ஆதாரங்களும் கிடைக்கப் பெறாமையால் மீண்டும் இந்த தீர்ப்பாயத்தின் தொடர்ச்சி நடத்தப்படலாம் என அந்த அமர்வின்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு அமைய `சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு பிரெமென் ‘International Human Rights Association Bremen (IMRV) மற்றும் ‘இலங்கையில் சமாதானத்துக்கான ஐரிஸ் பேரவை (Irish Forum for Peace in Sri Lanka (IFPSL)’ ஆகியன இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக ‘இனப்படுகொலை’ நடத்தப்பட்டதா என்பதை வரையறை செய்வதற்கான இரண்டாம் கட்ட அமர்வுக்கு மேலதிக கணிசமான சாட்சிகளும் ஆதாரங்களும் தேவை என்ற வாதம் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.
முன்னர் நடைபெற்றது போன்றே இம்முறையும் சர்வதேச ரீதியாக இனப்படுகொலை ஆய்வுகளில் வல்லுநர்களைக் கொண்ட நீதிபதிகள் அடங்கிய குழு, முன்னாள் ஐ.நா. அதிகாரிகள், சர்வதேச சட்டங்களில் வல்லுநர்கள் மற்றும் புகழ்பெற்ற சமாதான, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் சாட்சிகளைக் கேட்டு ஆய்வுசெய்துள்ளார்கள். இந்த அமர்வில், போரின் போது பாதிக்கப்பட்டவர்களின் நேரடிச் சாட்சியங்கள் பல பதிவு செய்யப்படவுள்ளன. இலங்கையில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் ஜேர்மனிக்கு நேரடியாக வந்து சாட்சியங்களையும் வழங்கியுள்ளனர். அத்துடன் சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமைக் குழுக்களால் நிரந்தர மக்கள் சபைக்கு கடந்த 2009ம் ஆண்டு முதல் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், அறிக்கைகள், ஆதாரங்கள் என்பனவும் இங்கு ஆராயப்பட்டுள்ளன.
இந்த அமர்வில் 2002ம் ஆண்டு இடம்பெற்ற சமாதானச் செயற்பாடுகள், அதில் ஏற்பட்ட தோல்வி, இறுதிப்போரின் போது பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் நடைபெற்ற மனிதப் படுகொலைகள் என்பன தொடர்பாக இந்தச் சபை விசேட கவனம் எடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இதுதவிர 1980ம் ஆண்டிலிருந்து இறுதிப்போர் வரை இலங்கையில் நடைபெற்ற போர் மற்றும் சமாதான நடவடிக்கைகளில் அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா ஆகிய நாடுகளில் பங்களிப்பு என்ன என்பது குறித்தும் இந்தச் சபை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது.
குறிப்பாக 1987ம் ஆண்டு இந்தியா தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கொன்றது தொடர்பாகவும், இறுதிப்போரின் போது அந்த நாடு கொண்டிருந்த வகிபாகம் தொடர்பாகவும் இந்தச் சபை கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இந்தச் சபையின் அமர்வில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும், சிறீலங்காவின் போர்க் குற்றங்களை ஆதாரங்களுடன் வெளியிட்டவரும், இறுதிப்போர் பற்றிய ஆவணப் படங்களைத் தயாரித்த ஊடகவியலாளருமான சனல்-4 தொலைக்காட்சியின் கொலம் மக்ரேயும் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியுள்ளார். இந்தத் தீர்ப்பாயத்தின் முடிவில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றவுள்ளார்கள்.
No comments:
Post a Comment